திங்கள், 7 மார்ச், 2011

உயிர்!

வியர்வை தாங்கும்
உஷ்ண வெட்கையில்
உடம்பு
நிம்மதி மூச்சுகளுக்காக
வாழ்வெல்லாம்
ஏங்கித் தவிக்கும்
உயிர்!

நீரிழிவு!!

வயிற்றில்
பசியெடுக்கும் அவஸ்தைகள்
பட்டனியிருந்தும்
சுகம் பெறாத வியாதியாய்!
அதே தொல்லைகள்;
என் வியாதி சீனியாகி
என் நாவிலேயே இனிக்கும்.

நோவினைகளை உடம்பில் போட்டு
ஓடும் குருதியினை சோதிக்க
இரத்தத்தில் எண்ணிக்கைகளை -
அரிய முயற்சிக்கையில்
நீரிழிவினால் செயலிழந்த
கிட்டினியின் ரகசியம் தெரியவரும்;

உயிரின் மூச்சு
கடந்த காலங்களாய்
சுவாசிக்க தல்லாடும்;
உடல் மெலிவில்
களைப்பு நிறைந்த தவிப்பு
நாவை வறட்சியாக்கிக் கொள்ளும்;

வைத்தியர்களின்
ஆலோசனைகளில்
பல்லாயிரம் ஆறுதல்கள்
மனதை தேற்றினாலும் 
இந்த நோய் நிறைந்த
நிலைமையிலும்
நிரம்பியிருக்கும்  வறுமை!

ஏன்?

நீ கொட்டுகிறாய்!
நீ கொட்டுவதைப் பற்றி
நாங்கள் மனம் குளிர
பேசிக் கொண்டிருக்கிறோம்!

நாங்கள்
சகிக்க முடியாத அழிவுகளை
நீ செய்கிறாய்!
நாங்கள்-
தாங்க முடியாத அவஸ்தைகளைப் பற்றி
கொஞ்சமும்  அறியாமல் அடை மழையாய்
இரவு பகலாய்
நீ கொட்டுகிறாய்!

துயரத்தின் மத்தியில்
வசித்த இல்லத்தை விட்டு
அகதி முகாங்களுக்கு  போன அவலத்தின்
கொடுமைகளையெல்லாம்
நீ அறியாது கொட்டுகிறாய்!

நீ; கொட்டுகிறாய்-என்று
பூமி பொறுமை இழக்கிறது!
ஆனாலும் ஓர் வேண்டுதல்
வருடா வருடம்
இயற்கை அழிவுகளை நேசிக்கும்
எம் வெள்ளை மனத்தையா
பள்ளமாக்கி போகிறாய்.??

வேதனைகளோடு!!!!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

எனதும் உனதும்
தூய்மையான உறவின் மீது
கலங்கத்தை ஏற்படுத்தியவள்
பூனையின் வாயில் அகப்பட்ட எலியாய்!!

பொறுமை-
வெற்றியை சுமந்து செல்லும்!
வயிற்றுக்குள் கதறும்
பசியின் கொடுமையறியாது
அடுப்பு எரியாமல் உறங்குவதாய்!!

மின் கம்பத்தில்
சிக்குண்டுத் தொங்கும்
வெளவ்வால்களின் கோலத்தில்
அந்தரத்தில் ஊஞ்சலாடும்-
 பொறாமை பிடித்த இதயங்கள்.,

நட்புள்ளங்களின் பாசக் குருதிகளை
உறிஞ்சிக் குடிக்கும்
அட்டைகளாய்-சில
இதயங்கள் தேங்கிக் கிடக்கும்!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

ஞாயிறு, 6 மார்ச், 2011

கீழ் வானம்....

மனசு
அடை மழை குளிரில்
சூரியனை காணத்
துடிக்கும்.

அவஸ்தைகள்
என் ஆத்மாவின் கதறல்களாய்
வறுமையை தடவும்!

அரசாங்கத்தின்
ஒரு சிறு நிவாரணப் பொதிகை
என் மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.

தென்றலின்
சுகமான மெல்லிய தடவல்
என் உடம்புக்கு காச்சலை கூட்டும்.

வீட்டு முற்றத்தோடு
தேங்கிக் கிடக்கும் நீரோடை
நுளம்புகளை பெருக்கும்.

இயற்கையின் அழிவுகளுக்கு வளம்
சேர்க்க
என் பிறந்த மண்ணில் இடம் தேடி
கடல் கொந்தளிப்பு....
பெரு வெள்ளம்....
சூறாவளிக் காற்று....
சுனாமி அட்டகாசங்கள் எல்லைகள் மீறும்!

டிசம்பர் மாதம் வருடா வருடம்
என் நெஞ்சில்
ஆறாக் காயங்களை ஏற்படுத்தும்.

மரணத்தின்
நிறந்தர பயணத்தில்
பயணம் செய்ய
ஆத்மாவின் சுவாசம்
மூச்சுக்களை அடக்க துடிக்கும்.

அடை மழை குளிரில்
சூரியனை காண
கண்கள் துடிக்க....
என் எழுத்துக்களை போல்
கீழ் வானம் வெளிக்கும்!
கார்முகில்களுக்குள்!.

தாய்மை!!!!


மழலையைப் பெற்றால் மாது
மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை!
அழகினைத் தாயிற் காணும்
அழகுக்கு உவகை இல்லை!
“கொழு கொழு” உடலைத் தூக்கிக்
கொன்சிடல் அழகு- பிள்ளை
அழுகையும் மிக அழகு
அகிலத்தின் பேரழகு!
உலகின் கருணை வெள்ளம்
உதிப்பது தாயின் உள்ளம்.
மழலையைப் பெற்ற மாது
மாண்புறு பெண்மை தானே!
தாய்மையே பெண்மையாகும்
தளிரென மழலைச் செல்வம்.
வாழ்வினில் பெற்றெடுத்தல்
வளமான செல்வமாகும்!
விளை நிலம் பெண்ணேயாவாள்
வேறெதற் குவமை சொல்வீர்.
அழகினில் தாய்மை மேலே
அடுத்தவை யாவும் கீழே!

கணவனே உயிர் !


கணவனை உயிரெனப் பேணுங்கடி! -அவன்
காதலை நாளுமே! போற்றுங்கடி!
குணத்தினில் வாசுகி ஆகுங்கடி-நல்ல
குங்குமம் நெற்றியில் பூசுங்கடி!
அன்பினால் கணவனை ஆளுங்கடி-தினம்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்குங்கடி!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடி-உயர்
தூய்மையை நாளுமே ஆக்குங்கடி!
கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடி-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணுங்கடி!
அற்புத மகவினை ஈனுங்கடி-அதை
அருமையாய் வளர்த்தின்பம் காணுங்கடி!
இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடி-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்றுங்கடி!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடி-என்றும்
வீணான கொள்கையை வீசுங்கடி!
அரைகுறை ஆடையைத் தள்ளுங்கடி-நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடி!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடி-என்றும்
கணவனை உயிரெனப் பேணுங்கடி!