சனி, 13 ஆகஸ்ட், 2011

ஊசலாடுகிறதே உயிர்!!!

சுடு காட்டுத் தணல் வீசும்
இந்த அக்கினிக் கிடங்கை
இன்னும் நாம் காவிக் கொண்டு ....!

வெற்றுடம் பெங்கும்
பயவுணர்கள் உரசுவது
இந்த நூற்றாண்டில் தான்

கையினில்
உயிரைப் போத்தியும்
ஏதோவொரு அந்தரிப்பில்
ஊசலாடுகிறதே உயிர்!

சதைசப்பி உமிழ்ந்து
குதறுவதான கனாக்களோடு
புரளுகிறது இரவுகள்
மீந்திருப்பவைகள்
விழி நீர்க் கசிவுகளும்
மாயைகளுமாய்.....

ஒரு மித்துக் கூவுவோம் இனி
சமாதானமென
இல்லையேல்
சமாதானக் காற்றினை
உள் வாங்கிட
அண்டவெளி சென்றாலும்
முண்டங்களைத் தானே
கொண்டு வரும்
வெண்புறாக்கள்!!

பெண்...!!!


இந்த தாய்மையின்
பள்ளமான கசிவுகளில்
ஊற்றாய் சுரக்கிறது
வாழ்க்கை...

தொப்புள் கொடியின் சுருளில்
வெட்டி விலக்கிய நுணியில்
வலித்தது இதயம் பீச்சியது குருதி

புலம்பிய மனதின் ஓலத்தில்
நிழலாக
தொடரும் சுகம்.............

"நாளை பேசும்"
என்ற
எதிர்பார்ப்பு நம்பிக்கை
நகரும் பயணத்தில்
நடை போடுகிறது வாழ்க்கை...

வீதியில்
அகதி முகாம்களில் வாழும்
பெண்களின் பேச்சு
அனுதாபங்களாய் மாறுகிறது..........

பெண்கள் நாட்டின் கண்களென்று
வார்த்தைகள்........
புகழ்ச்சிகள்............
பாராட்டுக்கள்..........
பேசப்படுகிறது.........

பெண்ணுக்கு
பாதுகாப்பு
எப்போது வரும்!
பெண்களை-
பாதுகாப்பது யார்.......?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சாய்ந்தமருது என்ற கவிதையின் தொடர்ச்சி டாக்டர் நஜிமுதீன் .....




வயலும் வயல் சார்ந்த மருதம்
வருடும் உடல் சோர்ந்த நேரம்
கயலும் கை கோர்த்த தொப்ப - பல
...அயலும் அதைப் பார்க்க மருளும்

தென்றல் தரும் அந்த மருதம்
திங்கள் எழும் அந்தத் திசையில்
நெஞ்சம் இதம் கொண்ட மனிதர் - அதில்
நிறைக்க வரும் மந்த மாருதம்

கிழக்கு நிலம் எங்கும் நோக்கின்
கடலும் கடல் சார்ந்த நெய்தல்
உடலின் உணர்வோடு ஒன்றி - அதில்
உறங்கத் தாலாட்டு இசைக்கும்

காடும் காடயல் முல்லை
கானகத்திடை எழு மருதம்
நாடோடு சேர்ந்ததோர் தருவாய் - இதில்
நாட்படச் சாய்ந்திடல் நம்புதற்கில்லை.

மருதமும் நெய்தலும் கொஞ்சி
முல்லையின் மனமதைத் தாங்கி
மலையிடைக் குறிஞ்சியின் - இள
மார்பிடை தவழும் தென்றலின் ஊடாய்

மனிதரில் விதைத்திட்ட சாந்தம்
மறைந்திடா சிதைந்தாலும் சிறிது
எளிதினில் மறக்காத வண்ணம் - இதை
எத்தியே வைத்திடல் ஏற்றம் என்றுரைப்பேன்

சாந்தமும் மருதமும் சேர்ந்திடும் பூமி
நெய்தலும் முல்லையும் சாமரம் வீசி
குறிஞ்சியின் சாரலால் குளிர்ந்தவள் - நான்கு
நிலங்களால் சூழ்ந்த சாந்தமா மருது!!!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சாய்ந்தமருதூர்............!

                                      
சாய்ந்த மருதூரில் பிறந்து உளமகிழ்ந்தேன்..............
ஆய்ந்து பார்த்தேன் என்னூர் சரித்திரத்தை
சாய்ந்த மருதென்று பெயர் வந்த தெவ்வாறு?
கேட்டேன் ஒருவரிடம்
அவர் பொழிந்தார்
அந்நாளில் ஊர் முகப்பில்
மாபெரிய மருத மரம்
சாய்ந்த படி நின்றதென்றார்
பதிலெனக்குத் திருப்தியில்லை
ஊரெல்லாம் சுற்றி வந்தேன்
உவகையினால் உள்ளம் குளிர்ந்தேன்

முக்காட்டு முகில் திரைக்குள்
முழு நிலவாய் எழில் முகங்கள்
தக்காளிப் பழக கன்னம்
தங்கமென அங்கங்கள்
மிக்கவுயர் பண்பாட்டு வாள் முகட்டில்
மின்னுகின்ற தாரகைகள்

வெற்றிலையின் சிறப்புக்கு
விளம்பரமாய்ச் செவ்வாய்கள்
கற்றறிந்தோர் மெத்தக்
கனத்திருத்தல் கண்டுணர்ந்தேன்!
சுற்றமென வரவேற்பு
சுவையான விருந்தோம்பல்
நற்றவ மாயத் தமிழங்கு;
நல்லபடி வாழக் கண்டேன்..

பள்ளிகளில் நின்று பாங்கோசை காற்றில் வரும்
உள்ளத்தில் பரவசத்தை ஊட்டி விடும்
முன்னாள் கடைத் தெருக்கள்
முழுப் பொருளும் அங்குண்டு
கல்வி நிலைய முண்டு
கவி வளமோ மெத்தவுண்டு!

நெல்லை மழையெனவே
நிலத்தில் சொரிகின்ற
நல்ல கர வாகு வட்டை
கடலாய் விரிந்திருக்க....
மருத நிலத்தெழிலே மனதார நான் ரசித்தேன்
மருத நிலந்தன்னை மருவி நிற்குங்
காரணத்தால்!

சாய்ந்த மருதூர் தான்
சாய்ந்த மருதாகியதோ.....?
என்னுள் வினவிய நான்
இனிதாய் விடை பெற்றேன்
மண்ணில் மருதூரும்
மகிமையுடன் வாழட்டும்!

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

பதிவுகள்...!!

உள்ளதின்  விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித்  தளங்கள்--- 

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச்  சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை  பூக்கள்!

ஒருயுக  விடிவில்
கலை  நோய்  பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு  நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய்  மலிந்த
புதுக் கவிதை  தொகுதிகள்----

தளம்பி   வீழும்
மரபுகளில்
ஒரு  சிறு
வழுக்கலை நீக்கும்
புது  வடிவங்கள்!

கசிவுகளாய்
உள்ளத்து   ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப்  பதிவுகள்
தனி  ரகமாய்  ஜொலிக்கும்

விமர்சனம்  வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்...

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....!!

பிறை....!

கடற் கரை மணற் பரப்பில்
இரவின் இருளில் நிழலொழுகும்!
அலைகளின் இன்னிசையூடே
பிறையை ரசித்திருப்பேன்!

மௌனமான இரவிலும்
என் இதயம் இறைவனை தரிசிக்கும்!
நல்லுள்ளங்களை தடவிக்
கொள்ளும் தென்றல் நான்!

உள்ளத்தின் பாச சுரப்பை
இந்த இரவில் பெருக்கினேன்..

காற்றின் தடவல்களை
தனிமையின் ஸ்பரிசத்தை
இயற்கையின் தழுவலை
வழிந்து நிறையும் மனதின் பரிவு!

வான் முழங்கும் மின்னல் ஒளியுறைவில்
கார் மேகங்களின் புற நீக்கல்
இதயங்களின் வளர்ச்சியும்
ஆழலின் மாறு தவிப்பும்..

நட்சத்திரங்களின் சிதறல்களில்
சுடரைக் காண்போர் எவருமில்லை

கடலை பார்க்கிறேன்
ஆண் அலையும் பெண் அலையுமாய் சீரி பாய்ந்து
என் முகம் கழுவிச் செல்லும்..

தென்றலூடே
தடவிக் கொண்ட சுகத்தால்
சுவாசிக்கும் மூச்சுக்களாய் உணர்வுகள்!

என் இதயத்து லயங்களிலும்.........
நாடி நரம்புகளிலும்............

ரத்தம் சுரக்கும் எலும்பிலும் மச்சைகளிலும்.....
சுற்றி தவழும் என் நினைவு....!
                                   

நோன்பு மாதம்......!

வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து
இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள்  வறியவர்  தீப்பசி  யுணர்ந்து
திருந்திட  அருளிடும்   மாண்பு

மண்ணறை  முஸ்லிம்  மாந்தர்கள்  கூடி
வாழ்த்தி  வரம்   பெறும்  திரு நாள்-அது
தண்மதி  நபிகள்  நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள்  பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள்  வேறாய்
வந்திடும்  பன்னிரு  மாதம்  -அதில்
அருளொளி வீசி  திருமறை   ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

 வாழ்வினை  யுணர்ந்து  தாழ்வினை  மறந்து
வாழ்ந்திட  வழிகளை  காட்டும்  -அது
கூழெளினும் ஏழை குடித்திட  ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய  நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர்  நெஞ்சம்  திருந்திடப் பண்ணும்
திருமறையருள்   நிதம் பொங்கும்'
                                    கலைமகள்  ஹிதாயா றிஸ்வி.