வெள்ளி, 30 டிசம்பர், 2011

மானிடப் பிறவி ..!


மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றிலும் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்கள் பாரிலே பிறப்பாள்.!

இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்

தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வளப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்

குருடனாய் ,செவிடனாய் ,குடிக்கு அடிமையாய்
அறிஞனாய் , கலைஞனாய் ஆயிரம் வேஷம்
எதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்

முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான் ..

கல்வித்தாய் அருள வேண்டும்...!



துள்ளி வரும் வெள்ளமென கல்வித் தாயே!
தூயமனத் துள்ளறிவை அள்ளித் தாவேன்
கள்ளமில்லா என் நெஞ்சில் கல்வித் தாயே!
காதலுடன் கலந்துயுர்வு பெற்றுத்தாவேன் ...!

ஏற்றமுடன் நான் செய்யும் பணியை சிலபேர்
இயலாமையால் இகலும் நிலையைக் கண்டேன்.
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்தவுடன் சுடரைத் தூவேன்...!

காலமெலாம் காசினிக்கு ஏற்றதாக
கனிவோடு பணி புரியக் கருணை செய்வாய்
சீல மோடு வாழ்ந்திங்கு தேவை மட்டும்
திருத்தமுடன் பணி புரிய அருளைத் தாவேன்...!

பொங்கி வரும் கல்விக்கு நிகரா யிந்தப்
பூதலத்தில் ஒரு செல்வம் வேறேதுண்டு
தங்க நிகர் கல்வித் தாய் அருள வேண்டும்...!
தரணியிலே தலை நிமிர்ந்து வாழவேண்டும்...!

அன்னை


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை
இத் தரை தன்னில் இவளரும் தியாகும்
எழுந்தே தொட்டிடும் விண்ணை !

கண்ணே !என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே !

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து )
இனிதாய்வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாள் !உய்வோம் !

பள்ளிப் பாடம் சொலித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் விடுவாள் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் தூலங்க வைத்தாள்
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை !

உதிரம் தன்னைப் பாழாய் உதிர்த்து
ஊட்டிவளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில் !
தோழி யென்றொரு அன்பு மலர் .இந்த
அவனியில் உதித்த பாசமலர் .!
என்னை நேசித்த இனிய மலர் ..ஒரு
இன்னலும் அணுகா (து)காக்கும் மலர் ..!

நண்பியாய் என்னை 'பெற்ற'மலர் ..எனை
துயரின்றி காக்கும் மலர் !
எத்தனையோ உறவைப் பெற்ற மலர் ..அவள்
என்றும் என்னுள்வாழும் பாசமலர் !

புன்னகை பூத்த புதிய மலர் ..ஒரு
புனிதமான கற்பு மலர் !
உண்மை நேசம் கொள்ளுமலர் ...ஒரு
உத்தமி யான பெண்மைமலர் !
துணைவன் வேண்டும்
சீதனம் எதுவு மில்லை
சீ ர்மைக்கு பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !

கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்

அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!


நினைவுகளை ஈரமாக்கும் நிகழ்வுகள்...



கடந்து விட்ட
காலங்களை
எண்ணி வாழும்
இதயம்...

சமூகச் சந்தையில்
புரட்சி சப்தங்களின்
எதிரொலிகள்.....

நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை
ஏய்க்கும் வாழ்வு....

இடையில் .....
ஏந்திழை என்
இலட்சியத்தின்
விடிவு நோக்கும்
விடாமுயற்சி.....

உலக சமாதானமும் இளைஞனும்



விமான மொடு "ராக்கெட்" ஏறி
விண்ணகம் அளந்த போதும்
இமாலய முகத்தைத் தொட்டு
எளிதெனக் கண்ட போதும்
சமாதனம் என்ற காற்று
தரணியில் வீசும் வண்ணம்
அமைதியைப் பேணும் பண்பு
அகன்றிடில் இன்பமேது?

சாதியத் தகர்த்து மண்ணில்
சமத்துவம் தன்னைப் பேணி
நீதியை வளர்ந் துயர்த்தி
நிலத்திடை அமைதி கண்டு
சாதனை இதுவே என்று
சகலரும் ஓன்று பட்டு
வேதனை அறுந்து சாய
வினை செயல் ! இளைஞர்பங்கே!

வேர் அற மரங்கள் சாயும்
வீழ்ந்திடும் இலைகள் காயும்
நீர் இல்லாப் பயிர்கள் யாவும்
நிச்சயம் வாடிச் சாகும்
பார்தனில் வாழும் மக்கள்
பண்புடன் சேர்ந்து வாழும்
சீர்மை தான் மறந்து போகில்
செகந்தனில் அமைதி சாகும் !

பூமியை சுவர்க்க மாக்கி
பொலிவினை முகங்கள் தேக்கி
தமது ரத்து வெள்ளம்
திரட்சியாய் எங்குமோட
நா மெலாம் ஓன்று பட்டு
நற்சமா தானந் தன்னை
வாருடன் வளர்ப்ப தொன்றே
வழி யெனக் கண்டு சேர்வோம் !

இன மத வேறு பாடு
இழி வெனக் கண்டு ணர்ந்து
மனந் தனில் மனிதர் யாவும்
ஓர் குலம் என்ற எண்ணம்
கனிந்திடில் மோதல் யாவும்
கரைந்துமே அமைதி பூக்கும்
சினமது தீர்ந்து போனால்
செக மெலாம் செழிப்புத் தானே....?

அவர் மொழி அவரவர்க்கு
அன்னையின் வடிவமாகும்
எவர் மனத் துள்ளு மிந்த
எண்ணமே உறைய வேண்டும்
சுவர்தனைப் போட்டு வீணே
துயரினை வளர்த்தல் கூடா !
சுவர்க்கமே உண்டு பண்ண
துணிந்தெழு ! இனைஞ நீயும் !

சுதந்திரம் மானிடர்க்கு
சொந்தமாம் என்ற வுண்மை
நிரந்தரம் வாழு மாகில்
நிலத்திடை அமைதி பூக்கும்
இதமுடன் உலகு வாழும்
இளைஞகாள் ஓன்று கூடி
நிதமிதை வளர்த்து மண்ணில்
நிம்மதி காக்க வாரீர் !

( பதியதளாவளையில் நடைபெற்ற கலாசாரப் போட்டியில் சாய்ந்த மருது அல் - ஹிதாயத் இளைஞர் கழகத்தின் சார்பில் முதலிடம் பெற்ற பரிசுக் கவிதை.அம்பாறை மாவட்டத்திலுள்ள தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது)