வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

திருமண வாழ்த்துக் கவிதை

மண மக்கள்
செல்வன் ஜமால்அப்துல்பாரி
மணமகள் ..பாத்திமா உஸாமா பானு
மண நாள் ..28.07.2011.
...காலைச் சுடரொளி கண்களில் படர
மாலை வான் நிறம் வாங்கிய வதனம்
முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
வாழ்விலோர் திருநாள் காணும்
மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
செந்திரு போல் விளங்கும்
செந்தமிழ் பானுமகள் பெண்மை
மாண்புறும் பெருநாள் உந்தன்
மணநாளில் ஹிதாயாவின் வாழ்த்தை
வானத்தின் மழைத்தூ வலாய்
குளிர்தமிழ்க் கவிதை யாலே
பெய்திட வந்தேன் வளம்
பெருக நும் வாழ்வின் வயல்

வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
நோக்கினில் உயர்ந்த பாச மருமகளே
தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க...!!
மாசணு காத மனத்துள் வாய்மை
தேசு படர தெளிந்த நீ ரோடையின்
ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
வீசும் தென்றலில் மேதினி பரவ.....!!!

பாரி மகனின் கருணை மனத்தால்
சாய்ந்த மருதூர் தந்த மருமகள்
இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
உஸாமா இன்றுன் வாழ்வில் இணைந்து
எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
தலைவன் பாரியோடு சார்ந்து இல்லற
வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்...

"இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
எழிலாய் அமைந்த மருமகளே அதன்
சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
செவ்வர விந்த மலரே,மலரின்
உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே...!
மேலாம் நிதியே!என்றெலாம் போற்றும் ...

சங்க காலத் தமிழிலக் கியத்தின்
மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக...!
போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
காதலில் இருவர் கலந்தொரு மித்து,

பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்

கோபுரம் போலு யர்ந்த
கொள்கையும்,அகன்ற வான் போல்
ஆதுரம் மிகு குணமும்
ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
சீருற பெற்று வாழ
திகழ் பரம் பொருளாம் இறை
தூதரின் நெறிகள் பேணி
சுகம் பெற வாழ்த்து கின்றேன்....!

"மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை..."

"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின் "என வள்ளுவன்
தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!

பெண்ணின் பெருமையெலாம்
பேசும் திருக்குறளின்
நுண்ணரிய கருத்தெல்லாம்
நுணுகிச் சுவைத்து நலம்
பண்ணி ஆயிரங் காலப்
பயிராய் தலைத்திடுவீர்...!

குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
கோடி இன்பம் கூட்டும் மழலை
மொழிகளின் இனிமையும்
செவிகளின் நிறைய....!
உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
இருவர்க் காம் எனும் இயல்பின ராகி....

நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்

நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் - என்னை மறவாது

"செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ்வீர்...!

என வாழ்த்தும்
குறையா அன்பில் உங்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக