திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்னருகே வாருமையா!

கன்னி யென் இதயத்தைக் காவு கொண்ட
காளையரே நீ ரெந்தன் கனவில் வந்தே!
என்னாளும் வாட்டுவது போது மையா!
இக் கணமே! என்னருகே வாருமையா!

வஞ்சி யென் இதயமலர் தன்னில் வீசும்!
வாசந்தான் உம்மீது கொண்ட காதல்
துஞ்சியுயிர் போகுமட்டும் தொலைந்திடாது
தூயவரே உமதெண்ணம் கலைந்திடாது!

பூப் போன்ற எழில் வதனம் காட்டி நெஞ்சில்
பொலிவான காதல் மலர் பூக்க வைத்தீர்!
காப்பாவீர் எந்தனுக்கு வாழ்வில் என்றும்!
காதலுடன் துணையாக நிலைப்பீர் நன்றாய்!

ராஜாவே! உனக்காக ஏங்கி இன்னும்!
ராத்திரிகள் நழுவுவது ஆகாதையா!
ரோஜாவாய் எனை நீரும் சூடிக் கொள்ள !
உடனோடி என் பக்கம் வருவீரையா!

அறிவாள் உணர்க!

அரபு நாட்டின் வெம்மையிலே!
அனுதினம் வெந்தாய் பணத்துக்காய்!
இரவும் பகலும் ஓயாது
இயந்திரம் போலே நீயுழைத்தாய் !

விறகாய் அங்கே நீ யெரிந்தாய் !
வீட்டில் அடுப்பு எரிவதற்காய்
உறவைப் பிரிந்தாய்.உயிரென்று
ஒம்பும் கௌரவம் அங்கு தீர்த்தாய்!

மண நாள் "மாலை"வாடு முன்னர்
வானிற்  பறந்து நீ சென்றாய்:
பணந்தான் வாழ்க்கை என்றெண்ணி:
பைத்திய மானோர் பலருண்டு:

துணையே! பணமும் வாழ்க்கைக்கு
துலங்கும் அறிவால்!நீயுணர்க!
இணையே!இல்லா!வாழ்க்கையிலே
இன்பம்!அன்பு உறவன்றோ!

தாழித்  தங்கம் விற்றே நீ!
தாவிச் சென்றாய் பொருளீட்ட
வேலியில்லா மனத்  தரையில்
விதைத்தாய் நீயும் பேராசை

கேலிக் கூத்தாம் உன் வாழ்க்கை
கிடைக்கும் பணத்தால்!கிடைக்காது !
பாழாய் போன இளமை சுகம்:
வருமோ! மீண்டும் நீயுணர்வாய்!

மாமிக்கு வேண்டிய ம(று)ருமகள்!

அழகுக்கு  ஓருருவாய்  அவனியிலே!
அமைய வேண்டும் எனக்கு மோர் மருமகளே!
பழக்கத்தில் பெருந்தன்மை சொலிக்க வேண்டும்;
பண்பாட்டை மறவாது நடத்தல் வேண்டும்!

கற்றறிந்த பெண்மகளாய் இருத்தல் வேண்டும்-கணவன்
கருத்தறிந்து விருந்தளிக்கத் தெரிய வேண்டும்;
பற்றோடு குடும்பத்தைப் பேண வேண்டும்;
பத்தினியாய் குலமானம் காக்க வேண்டும்;

சண்டையோடு சச்சரவைத் தவிர்க்க வேண்டும்;
சாடை,கோள் இழிவுரைகள் விலக்க வேண்டும்;
தன்னொளிரும் வெண்ணிலவாய்த் திகழ வேண்டும்;
தன் பதியைத் தெய்வமென மதிக்க வேண்டும்;

குணத்திலுயர் குன்றாக நிற்க வேண்டும்;
குற்றங்கள் தனைபொறுக்கு முள்ளம் வேண்டும்;
பணமிருந்தும் திமிரில்லா திருக்க வேண்டும்;
பாசமலர் இதய(ம்) மணம் வீச வேண்டும்;

பெண்மையதன் குணமனைத்தும் ஒருங்கே வேண்டும்;
பேரழகுப் "பேரர்"கலைத் தரவும் வேண்டும்;
மண்ணகத்தில் எனகேற்ற ம(று)ருமகளாய்;
மாமியென்னைத் தன் தாயாய் மதிக்க வேண்டும்.

மருமகள் வர வேண்டும்!

அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்

கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!

நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.

தட்டிக்கழிக்கலமோ ?பட்டுக்கன்னம் தொட்டுக் கொஞ்ச  இட்டமில்லையோ?
கட்டழகி என்னைவட்ட மிடவில்லையோ?
தொட்டுத் தொட்டுப் பேசிக்கிட்ட வரவில்லையோ?
எட்டி நின்று பார்க்கும் நேரம் நட்டமில்லையோ?

எட்டு இரு வயதுப்பெண் சிட்டு அல்லவோ?
பட்டுப்பூச்சி சிட்டைத் தேடி வரவில்லையோ?
தட்டுத்தடு மாறி நிலை கெட்ட தென்னவோ?
சுட்டும் விழிச் சுடர்பட்டுத் தவிப்பில்லையோ?

ஒட்டி உற வாடக்கட்ட ளைக்களுமுண்டோ?
கட்டித்தங்க மிவள் வட்ட மதியல்லவோ?
 பொட்டு இட்டுக் கூந்தலள்ளிக் கட்டவில்லையோ?
பூஞ்சிட்டிவள் கரந்தொட்டுப் பேசவில்லையோ?

பட்டிக்காடோ ?பட்டணமோ? பதிலெதுவோ?
கெட்டித்தன மாவதற்க்கு  மனமில்லையோ?
சுட்டிப் பெண்ணைக் கட்டிக் கொள்ள நினைவில்லையோ?
சட்டம் ஏதும் உண்டோ? வீண் சங்கடமுண்டோ?

பெட்டைக் கோழி அழைப்பதைத் தட்டலாகுமோ?
தொட்டுத்தாழி கட்ட நகை நட்டு வேண்டுமோ?
மொட்டுமல ராவதற்க்குத் "துட்டு"வேண்டுமோ?
பெட்டையர்க ளென்றால் என்ன "மட்டம்"ஆகுமோ?சனி, 19 பிப்ரவரி, 2011

அநியாயம்!!!

நேற்று நடு நிசியில்
கண்ட;
காதல் கனவுகளின்
ஆனந்த ராகத்தைக் கலைத்தது
சந்தியிலே கேட்ட
துப்பாக்கி ராகங்கள்...

நினைவுகள்!!

முட்கள் நிறைந்த
ரோஜா செடியினுள்
வாசம்மட்டுமா வீசுகின்றது???
உனது-
நினைவுகளும் தான்......

சகீ!!!!

கல்லுக்குள்ளே ஈரமுண்டு-
என்பதை-
நான் புரிந்துகொண்டேன்..
சகீ-
உனக்குள்ளே
என் நினைவுகள்
இருப்பதனால்!!!

தேசம்!!!

வாசமில்லாத
தேசமிது
நீ
ஆட்சிக்கு வருவதற்கு
முன்.....

நிழல்!!!

நேசித்தவளின்
பாசம் மட்டும்
நிழலாடுகிறது
இதயத்தில்....

நான்....நீ.....

அழுகை சத்தத்தோடு
பிறந்தேன்
நான்
என்
சந்தோசத்தோடு
கலந்து
சிரித்தாய் நீ!!!

காத்திருப்பு...

கறுப்பு மாறிய
உன்-
வெள்ளை முடியில்
ஜொலிக்கின்றன...
மரணத்தின் தடவல்கள்....

கைதி!!!

உன் இதயச்சிறையில்
தரிசிப்பதற்கு
கனாக் காணும்
ஆயுள் கைதி
நான்....

ஏமாற்றம்!!!

அந்தப் பணக்காரவாலிபனுக்கு-
சரீரப்பசி!
சில-
ஏழைக் கண்ணிகள்
வர்ணிக்கப்படுகிறார்கள்...!

விழி போன பின்....

எத்தனையோ யுகங்களாய்
உன்-
அன்பு மடலைத் தேடினேன்!
கிடைக்கவில்லை!
நேற்று-
நீ போட்டாயாம்
அம்மா
வாசித்துக் காட்டினாள்!
நேற்றுத் தான்
விபத்தொன்றில்
நான்
கண்களை
இழந்து விட்டேன்...!

புதன், 16 பிப்ரவரி, 2011

நபி பெருமானார்!!!!


மண்ணகத்தை மாற்ற வந்தார்!
நபி பெருமானார்-மாந்தர்
இன்னல் யாவும் தீர்க்க வந்தார்
நபி பெருமானார்!

இறுதித் தூதராக வந்தார்
நபி பெருமானார்-வாடும்
வரியவரைத் தேற்ற வந்தார்
நபி பெருமானார்!

வானில் நிலா போலொளிர்ந்தார்
நபி பெருமானார்-நல்ல
தீனின் ஒழியாத் திகழ்ந்தார்
நபி பெருமானார்!
இஸ்லாத்தைப் பரப்பவந்தார்
நபி பெருமானார்-மாந்தர்
கஷ்டமெலாம் தீர்க்க வந்தார்
நபி பெருமானார்!

பாவக்கறை தீர்க்க வந்தார்
நபி பெருமானார்-கொடுஞ்
சாபவினை போக்க வந்தார்
நபி பெருமானார்!

அறியாமை அகற்ற வந்தார்
நபி பெருமானார்-தூய
நெறி புகட்டி அருள வந்தார்
நபி பெருமானார்!!!