புதன், 11 மே, 2011

அது தானே....!!!

கொதிக்கும் மனதில்
ஆறுதலான தடவல்..!

நீ...,
தூவும் எரியும் வெயிலில்
நான்-
பாதம் பதிப்பதா....?????
அல்லது-
பாதத்தைக் காப்பதா....????

சஹாராப் பாலைவனமான
பூமியின் சூட்டில்
தவிக்கும் நாவின்
தாகம்
எனதானது...!!!

புரிகிறதா தோழி;
மனதின் வேதனை...!!!
உயிர் ஊசலாடும் வரை
ஈழத்தின் போராட்ட அவஸ்தையாய்...!

இதோ...
எனது விருப்பம்
கடற்கரையின் ஈரமணலை
ஊட்டி....ஊட்டி...
மண் வீடு கட்டி உதைக்கும்...
சின்னக் குழந்தைகளின்-
விளையாட்டுத் தானே
என் இதயத்தின்
மகிழ்ச்சி....!!!

யார் சொல்வார்...??
பாச இருளின்
 வெளிச்சத் தடவலை....????
சுனாமியின் வரவு
தந்த உறவு தானே-
உனதான உயர்வுகள்...???

எண்ணிப் பார்த்து விடலாம்
துட்டுக்களின்
எண்ணிக்கையென்றால்
இது...
உதிரங்களின் உதிர்வுகளாயிற்றே-

என்ன செய்வதாய்
உத்தேசம்....?????
யோசித்துக் கொண்டே இரு!!!
கிடைக்கும் உனக்கு
மன-ஆறுதல்
அது தானே
.நொந்து சருகாகும்
என் இதய இழையின்
எதிர்பார்ப்பு!!
தோழி....,
இப்போ-
புரிகிறதா உனக்கு.....!!!!!!

செவ்வாய், 10 மே, 2011

உரிமை தந்தாய் நீ.....!!!!

என் உடலின்  உறுப்புகளுக்குள்
நிறைந்திருந்தன
உனது நினைவுகள் கலந்த
உணர்வுகளின் நிழல்கள்...!!

பாசத்தோடு
மனதின் சந்தோஷங்களை எங்கோ
தூறல்களாக கசியவிட்டு
நினைவுகளோடு கலந்து இருக்கிறது
மனசு...

இதயம்
பாசத்தை சொரிந்து
அன்பினை பரிமாறிக் கொள்கிறது.
எனக்கு பிடித்த உன்னை
உயிராய் கலக்கின்றது.

நட்புடனே
பாசத்திற்கு மலர்ந்த உன்னை
இதயம் போற்றிப் பாடுகிறது.

பனித் துளிகளைப் பீச்சி
மனதை ஈர நெஞ்சமாக்கி வைக்கிறது
மறக்கமுடியாத
உன் பாச அரவணைப்பு....
இதயம் கொடுத்து
உரிமை தந்தாய் நீ.....!!!! 

மருந்து

என்ன நோய் என நினைத்து
குருதி பரிசோதனைக்காக;
சாப்பாடுகளின்றி பத்தியம் காத்திருந்தேன்.

நோய் பரவலாகவும்
உடம்பு சோர்வாகவும்
கலந்து கொண்டிருந்தன.

வேதனை தொடரக் கூடாதென
மருத்துவமனையில்-
அனுமதிக்கலானேன்.

மருந்து-
பல நிறங்களில்
குடிக்க ஆரம்பித்தேன்.

குடித்து முடிந்த உணர்வுகளில்
மட்டும் எண்ணற்ற
நிலைமைகள்-மாறிக் கிடந்தன....!!!

செவ்வாய், 3 மே, 2011

அவமானம்.......

என் உயிரின் சுவாசங்களுக்குள்
மூச்சுக்களாய் தடவிச் செல்லும்
உன் நினைவு
உன் துயரங்களுக்காய்
வருந்தும் என் இதயம்.
உன் நினைவுகளின் நகர்வில்
நிழலாகும் மனசு.
எதிர்பார்த்திருக்கவில்லை.
என் குழந்தைகளின் குருதியாய்
நீ பிறந்திருப்பாய் என்று.

வாழ்க்கைப் புத்தகத்தில்
முன்னுரைப் பக்கங்கள்.
பிறப்பை உறுதிப்படுத்த
நான் உன்னை
தரிசிக்கக் கூடும்.

என்றும் உறவு
நிலைத்திருக்கிறது.
அப்பத்தா ,
தினம் சொல்லும் அறிவுரை
மலத்தைக் கண்டால் மிதிப்பான்
நீரைக் கண்டால் கழுவுவான்.
பாடலாய் செவிப் பாறைகளில்
ஒலிக்கும் அவமானம்.......

ஞாயிறு, 1 மே, 2011

இது சத்தியம்...!!!

எங்கள்-
வாழ்க்கைப் பாதையை
வழி மறிகின்ற,
தோல்வி பாறாங்கற்கள்!!
பாதங்களை நகர்த்த
முடியாத தடங்கள்....

எங்கள் சப்தங்கள்
உங்கள் காதுகளில்
விழுகிறதா...
முதலாளிவர்க்கமே??

விடாமுயற்சி தான்-
எங்களின் வேலை..!!
நாளைய தசாப்தங்களில்
எங்கள் சந்ததிகள்
நிச்சயமாக
உங்களின் அடிமைகள்
அல்ல...!!அல்ல...!!

சோதனை மலர்கள் நாம்...!
தேனைப் பருகும்
அக்கினி வண்டுகள்நீர்...!

நாம் அனாதைகளல்ல
பரம்பரை பரம்பரையாய்த்
தோல்விகளைத்
தோழர்களாக்கிய...
உண்மை ஜீவிகள்...!!!

சத்தியமிட்டுச் செல்கிறோம்...
தொடர்கதையாய்
எழுதப்பட்ட தோல்விக்கு...
இனி-
முடிவுரை எழுதப்பட்டே தீரும்.....