திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வாடியது
என் மனம்
சிரித்தது
உன் முகம்..........!
என்
மனச் சந்தோஷம்
தொலைகிறது
நீ
என்னை
சந்தித்த பின்...!
உயிர்
ஊசலாடுகிறது
நிம்மதி இல்லை
மனதில்...!
வயிறு அழுகிறது
அடுப்பு
எரியவில்லை - என்று....!
இதயம்
கசிகின்றது
தோழி
உன்
நினைவு ஊற்றெடுக்க வேண்டும் என்று .....!
கவலை
உயிரை ஊறிஞ்சி
எடுக்கின்ற
அட்டை.....!
இலட்சியங்களுக்கு
திசைகாட்டி
வழிகாட்டி செல்கிறது
கவிதை....!
பாசம் கூட
வேஷமாகிறது
நீ
துவேசத்தோடு
என்னை
நேசிக்கும் - போது......!
நேசித்தவளின்
பேச்சுக்கள் மட்டும்
இருக்கிறது
என் கை
தொலைபேசியில்......!
நான் எழுதினேன்
கவிதை
பலியானது
உன் நாமம்...!
மூச்சுக்கள் சுகமானது
சுவாசத்தில்
நீ
சுவாசித்து மூச்செடுப்பதால்....!
தூக்கம் வருவதை
எப்படி
தடுப்பது
மரணம்
நிச்சயிக்கப்பட்ட - பின்...!
தாய்
சிந்திய
குருதி துளி
சிசு.....!
வாங்கவில்லை
பெரு நாள் உடுப்பு
துயரத்தில் ஏழை அகதிகள்......!
தாலிக் கொடி
உறுதிப் படுதியது
தொப்புள் கொடி இருப்பதை........!
இதயத்தை கசக்கி
அன்பை பொழிவது
காதல்
காதலை சுரந்து
இதயத்தை தடவுவது
நட்பு.....!
நான்
சிந்தித்தால்
வருகிறது கவிதை
நீ
வாசித்தால்புரிகிறது
வாழ்கை........!
மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு - தூய
காதல் பூவைக் கசக்கும் தீயோர்
கருகும் நிலை உண்டு.......!
பெண்மை தன்னை விடவா இந்தப்
பேயாம் சீதனம் உயர்ந்தது...?
உண்மை உணர்ந்த ஆண்கள்
உதறி ஏற்பார் நற் பெண்ணை......!

சீதனமா ...? பெண்களா...? சொல்லுங்கள்....
மனக் கவலைக்கு
மருந்தாகிறது
நட்புக் குளிசைகள்...!
கண்களில் கண்ணீர்
நிறைந்து வழிந்தன
அவள்
தாகத்துக்கு தண்ணீர்
கேட்ட போது.......!
ஒரு பொய்
கலந்திடும் போது
விஷமாவது பானமல்ல
மனசு...!
மனம் நோக
பேச மாட்டேன்
என் மனதில்
வாழுகின்ற நீ
நொந்து போவாய்
என்பதால் !
காதலை
அவமானப்
படுத்திய பிறகு தான்
யோசிக்கிறேன்
காதலிபதற்கு....!
நீ:
என்னைமறந்தாலும்
கவலையில்லை!
வெறுத்தாலும் :
கவலையில்லை!
யாரையும்
நட்புக் கொள்லாதவரை!!
நீ :
என் கண்களில்
இதயத்தில்
நினைவுகளில் பதிந்த
முதல் உருவம் !
முற்றத்து மல்லிகை:
மணக்காதாம் :
நான்
பின் பக்கத்து ( கொள்ளைப் பக்கம் தான்)
வாழ்கிறேன் !
...அதனால் தான்
நான் இன்று
உன் மனத்திலாவது
மணக்கிறேன்!
மரணம்....!
மனித வாழ்க்கையில் ,
சுவாச மூச்சுக்களை
நாம் -
சுகமாக
...விடும் போது,
ஏற்படும் ஒரு
"தடை"
என்
இதய ஊற்றுக்களில்
கசிந்து வடியும்
துளிகள் -
 நட்புள்ளங்கள்.....!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

திருமண வாழ்த்துக் கவிதை

மண மக்கள்
செல்வன் ஜமால்அப்துல்பாரி
மணமகள் ..பாத்திமா உஸாமா பானு
மண நாள் ..28.07.2011.
...காலைச் சுடரொளி கண்களில் படர
மாலை வான் நிறம் வாங்கிய வதனம்
முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
வாழ்விலோர் திருநாள் காணும்
மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
செந்திரு போல் விளங்கும்
செந்தமிழ் பானுமகள் பெண்மை
மாண்புறும் பெருநாள் உந்தன்
மணநாளில் ஹிதாயாவின் வாழ்த்தை
வானத்தின் மழைத்தூ வலாய்
குளிர்தமிழ்க் கவிதை யாலே
பெய்திட வந்தேன் வளம்
பெருக நும் வாழ்வின் வயல்

வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
நோக்கினில் உயர்ந்த பாச மருமகளே
தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க...!!
மாசணு காத மனத்துள் வாய்மை
தேசு படர தெளிந்த நீ ரோடையின்
ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
வீசும் தென்றலில் மேதினி பரவ.....!!!

பாரி மகனின் கருணை மனத்தால்
சாய்ந்த மருதூர் தந்த மருமகள்
இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
உஸாமா இன்றுன் வாழ்வில் இணைந்து
எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
தலைவன் பாரியோடு சார்ந்து இல்லற
வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்...

"இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
எழிலாய் அமைந்த மருமகளே அதன்
சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
செவ்வர விந்த மலரே,மலரின்
உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே...!
மேலாம் நிதியே!என்றெலாம் போற்றும் ...

சங்க காலத் தமிழிலக் கியத்தின்
மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக...!
போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
காதலில் இருவர் கலந்தொரு மித்து,

பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்

கோபுரம் போலு யர்ந்த
கொள்கையும்,அகன்ற வான் போல்
ஆதுரம் மிகு குணமும்
ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
சீருற பெற்று வாழ
திகழ் பரம் பொருளாம் இறை
தூதரின் நெறிகள் பேணி
சுகம் பெற வாழ்த்து கின்றேன்....!

"மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை..."

"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின் "என வள்ளுவன்
தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!

பெண்ணின் பெருமையெலாம்
பேசும் திருக்குறளின்
நுண்ணரிய கருத்தெல்லாம்
நுணுகிச் சுவைத்து நலம்
பண்ணி ஆயிரங் காலப்
பயிராய் தலைத்திடுவீர்...!

குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
கோடி இன்பம் கூட்டும் மழலை
மொழிகளின் இனிமையும்
செவிகளின் நிறைய....!
உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
இருவர்க் காம் எனும் இயல்பின ராகி....

நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்

நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் - என்னை மறவாது

"செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ்வீர்...!

என வாழ்த்தும்
குறையா அன்பில் உங்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி

போ நீ

உள்ளத்திலே நிம்மதி யோங்க
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க
அப்பாவிப் பெண் களாக
வாழ்ந்திடனும் மர்ம மனிதரே ஓடு

...மனிதனை மனிதன் கழித்து
உயிரினை அழித்து விழ்த்திச்
சனியனாம் ஆட்டம் போடும்
கிரீஸ் மனிதரே போ நீ

பாய்ந்து பாய்ந்து நாளும்
பயமுருத்தும் அவலம் மாறி
தாயுடன் பிள்ளை யாகத்
தழுவிடப் பேய்யுருவமே ஓடு

வீ ட்டுக்குள் பெண்களை அடக்கி
வீதியில் ஆண்களை கூட்டி
கூட்டு வாழ்கை யைக் கொல்லும்
கொடிய கள்ளனே ஓடு

அமைதியே சொர்க்க மாகும்
ஆனந்த வெள்ள மஃதே
மனிதரெனும் கொடிய பாவியே
பெண்களை விட்டு ஓடு

பூ

என்
உள்ளத்துச் செடி
பூக்கிறது
நீ வந்து - வண்டாய்
மொய்த்த பின்

ரமழான் மாதம்.....!

புனிதமாம் ரமழான் மாதம்:
போற்றிடும்! இறையோன் வேதம் :
இனிதென! மனிதர் வாழ்வு
இலங்கிட அருளும் மாதம்!.

...நோன்பினை நோற் போருள்ளே!
நுளைந்திடும் நல்லுணர்ச்சி :
மாண்புறை குழந்தை யொத்த!
மனம் வரும்! பாவம் தீரும் ;

சுவர்க்கமோ! நோன்பாளர்க்கு
சுகமுடன் காத்திருக்கும் ,
தவத்திரு நோன்பு நோற்போர்
தலத்தினில் மேலோராவர் !

சைத்தாணை சிறையில் பூட்டித்
தடுத்திடும்! மாதம் ரமழான் !
வைத்தாளும் இறையோ னன்பை
வாங்கி நாம் மகிழும் மாதம்!

பாவங்கள் தீர்ந்து நல்ல!
பலன் வரும் நோன்பினாலே
சாபங்கள் தீரும்! வானோர்
சலுகைகள் வந்து சேரும்!

ஐந்து நற் கொடைகள் தன்னை
அருளித் தன் "உம்மத்திற்கு"
தந்துளா னிறையோன்! நோன்பைத்
தவறிடல் பாவமாகும்....!

சனி, 13 ஆகஸ்ட், 2011

மிதக்கும் கனவுகள்...!!

மனசு
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்
துடிக்கும்..

கற்பனைகள்
என் உள்ளத்தின் உணர்வுகளாய்
பிம்பம் சேர்க்கும்...

சுவாசத்தின்
ஏக்கப் பெரு மூச்சு
என் கவலைக்கு தீ மூட்டும்

பிள்ளைப் பேறு நேரம்
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..

சிசுவின் கதறல்களுக்கு பால்
கொடுக்க
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய
சின்னக் கரங்கள் விளையாடும்.
பாசம் சுரந்து
தாய்மையின் உணர்வுகளில்
என் மன விழிகள்..!!

ஆத்மாக்களின்
பரிதாப அவலங்கள்
காணாமல் போக
சிசுக்களின் பிறப்புக்களில்
இதயம் மகிழும்...

இல்லற வாழ்விலே
இணைந்து போக
கனவுகள் மிதக்க
என் தமிழைப் போல்
எழுத்துக்கள் கவிதையாகும்
கலையுலகில்....

வெளிச்சத்துக்கு வந்து விடு...... !!


நீ
வெளிச்சத்தின்
விலாசத்தை
விசாரிக்கிறாய்
பிறரிடம்
அது உன்
விழி வாசல்களில்
உட்கார்ந்திருப்பதை
உணராமல்
சமூக விலங்குகளுக்கு
சத்தியம் செய்து கொடுத்தாய்
சத்தியம் எது
என்று உணராமல்
இப்போது
உன்
உடல் காட்டுக்குள்
உணர்ச்சித் தீ
அடிக்கடி
பற்றிக் கொள்ள
நீ
அவதிப்படுகிறாய்
வெளியுலகத்திற்கு
நீ தூய்மையானவள் தான்
இருந்தாலும்
உள்ளத் தூய்மைக்கு
உணர்ச்சித் தூரிகை
உரசி உரசி
அடிக்கடி
வண்ணம் தீட்டுகிறதே
உணர்துக் கொள்
இன்னும் உன்
உணர்ச்சிக் கலை
உறங்கவில்லை என்று
இங்கே
ஒரு சோலைவனம்
உனக்காக காத்திருக்க
நீ ஏன் இன்னும்
பாலைவனத்துக்கு
பல்லைக் காட்டுகிறாய்
போலி வாழ்க்கைக்கு
கட்டிய தாலியை
கழற்றி எறி
உனக்காக ஏற
இன்னும் ஒரு தாலி
இங்கே காத்திருக்கிறது
உன்
உணர்ச்சித் தொட்டாக்களே
ஒரு நாள்
சமூக விலங்குகளை
சுட்டு வீழ்த்தும்
அதற்கு முன்னே
கழற்றி
எரிந்து விட்டு
நீயே வந்து விடு
இருட்டுக்குள் நீ
குருட்டுக் கண்
கண்டது போதும்
இனி
வெளிச்சத்துக்கு வந்து விடு......

ஊசலாடுகிறதே உயிர்!!!

சுடு காட்டுத் தணல் வீசும்
இந்த அக்கினிக் கிடங்கை
இன்னும் நாம் காவிக் கொண்டு ....!

வெற்றுடம் பெங்கும்
பயவுணர்கள் உரசுவது
இந்த நூற்றாண்டில் தான்

கையினில்
உயிரைப் போத்தியும்
ஏதோவொரு அந்தரிப்பில்
ஊசலாடுகிறதே உயிர்!

சதைசப்பி உமிழ்ந்து
குதறுவதான கனாக்களோடு
புரளுகிறது இரவுகள்
மீந்திருப்பவைகள்
விழி நீர்க் கசிவுகளும்
மாயைகளுமாய்.....

ஒரு மித்துக் கூவுவோம் இனி
சமாதானமென
இல்லையேல்
சமாதானக் காற்றினை
உள் வாங்கிட
அண்டவெளி சென்றாலும்
முண்டங்களைத் தானே
கொண்டு வரும்
வெண்புறாக்கள்!!

பெண்...!!!


இந்த தாய்மையின்
பள்ளமான கசிவுகளில்
ஊற்றாய் சுரக்கிறது
வாழ்க்கை...

தொப்புள் கொடியின் சுருளில்
வெட்டி விலக்கிய நுணியில்
வலித்தது இதயம் பீச்சியது குருதி

புலம்பிய மனதின் ஓலத்தில்
நிழலாக
தொடரும் சுகம்.............

"நாளை பேசும்"
என்ற
எதிர்பார்ப்பு நம்பிக்கை
நகரும் பயணத்தில்
நடை போடுகிறது வாழ்க்கை...

வீதியில்
அகதி முகாம்களில் வாழும்
பெண்களின் பேச்சு
அனுதாபங்களாய் மாறுகிறது..........

பெண்கள் நாட்டின் கண்களென்று
வார்த்தைகள்........
புகழ்ச்சிகள்............
பாராட்டுக்கள்..........
பேசப்படுகிறது.........

பெண்ணுக்கு
பாதுகாப்பு
எப்போது வரும்!
பெண்களை-
பாதுகாப்பது யார்.......?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சாய்ந்தமருது என்ற கவிதையின் தொடர்ச்சி டாக்டர் நஜிமுதீன் .....
வயலும் வயல் சார்ந்த மருதம்
வருடும் உடல் சோர்ந்த நேரம்
கயலும் கை கோர்த்த தொப்ப - பல
...அயலும் அதைப் பார்க்க மருளும்

தென்றல் தரும் அந்த மருதம்
திங்கள் எழும் அந்தத் திசையில்
நெஞ்சம் இதம் கொண்ட மனிதர் - அதில்
நிறைக்க வரும் மந்த மாருதம்

கிழக்கு நிலம் எங்கும் நோக்கின்
கடலும் கடல் சார்ந்த நெய்தல்
உடலின் உணர்வோடு ஒன்றி - அதில்
உறங்கத் தாலாட்டு இசைக்கும்

காடும் காடயல் முல்லை
கானகத்திடை எழு மருதம்
நாடோடு சேர்ந்ததோர் தருவாய் - இதில்
நாட்படச் சாய்ந்திடல் நம்புதற்கில்லை.

மருதமும் நெய்தலும் கொஞ்சி
முல்லையின் மனமதைத் தாங்கி
மலையிடைக் குறிஞ்சியின் - இள
மார்பிடை தவழும் தென்றலின் ஊடாய்

மனிதரில் விதைத்திட்ட சாந்தம்
மறைந்திடா சிதைந்தாலும் சிறிது
எளிதினில் மறக்காத வண்ணம் - இதை
எத்தியே வைத்திடல் ஏற்றம் என்றுரைப்பேன்

சாந்தமும் மருதமும் சேர்ந்திடும் பூமி
நெய்தலும் முல்லையும் சாமரம் வீசி
குறிஞ்சியின் சாரலால் குளிர்ந்தவள் - நான்கு
நிலங்களால் சூழ்ந்த சாந்தமா மருது!!!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சாய்ந்தமருதூர்............!

                                      
சாய்ந்த மருதூரில் பிறந்து உளமகிழ்ந்தேன்..............
ஆய்ந்து பார்த்தேன் என்னூர் சரித்திரத்தை
சாய்ந்த மருதென்று பெயர் வந்த தெவ்வாறு?
கேட்டேன் ஒருவரிடம்
அவர் பொழிந்தார்
அந்நாளில் ஊர் முகப்பில்
மாபெரிய மருத மரம்
சாய்ந்த படி நின்றதென்றார்
பதிலெனக்குத் திருப்தியில்லை
ஊரெல்லாம் சுற்றி வந்தேன்
உவகையினால் உள்ளம் குளிர்ந்தேன்

முக்காட்டு முகில் திரைக்குள்
முழு நிலவாய் எழில் முகங்கள்
தக்காளிப் பழக கன்னம்
தங்கமென அங்கங்கள்
மிக்கவுயர் பண்பாட்டு வாள் முகட்டில்
மின்னுகின்ற தாரகைகள்

வெற்றிலையின் சிறப்புக்கு
விளம்பரமாய்ச் செவ்வாய்கள்
கற்றறிந்தோர் மெத்தக்
கனத்திருத்தல் கண்டுணர்ந்தேன்!
சுற்றமென வரவேற்பு
சுவையான விருந்தோம்பல்
நற்றவ மாயத் தமிழங்கு;
நல்லபடி வாழக் கண்டேன்..

பள்ளிகளில் நின்று பாங்கோசை காற்றில் வரும்
உள்ளத்தில் பரவசத்தை ஊட்டி விடும்
முன்னாள் கடைத் தெருக்கள்
முழுப் பொருளும் அங்குண்டு
கல்வி நிலைய முண்டு
கவி வளமோ மெத்தவுண்டு!

நெல்லை மழையெனவே
நிலத்தில் சொரிகின்ற
நல்ல கர வாகு வட்டை
கடலாய் விரிந்திருக்க....
மருத நிலத்தெழிலே மனதார நான் ரசித்தேன்
மருத நிலந்தன்னை மருவி நிற்குங்
காரணத்தால்!

சாய்ந்த மருதூர் தான்
சாய்ந்த மருதாகியதோ.....?
என்னுள் வினவிய நான்
இனிதாய் விடை பெற்றேன்
மண்ணில் மருதூரும்
மகிமையுடன் வாழட்டும்!

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

பதிவுகள்...!!

உள்ளதின்  விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித்  தளங்கள்--- 

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச்  சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை  பூக்கள்!

ஒருயுக  விடிவில்
கலை  நோய்  பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு  நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய்  மலிந்த
புதுக் கவிதை  தொகுதிகள்----

தளம்பி   வீழும்
மரபுகளில்
ஒரு  சிறு
வழுக்கலை நீக்கும்
புது  வடிவங்கள்!

கசிவுகளாய்
உள்ளத்து   ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப்  பதிவுகள்
தனி  ரகமாய்  ஜொலிக்கும்

விமர்சனம்  வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்...

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....!!

பிறை....!

கடற் கரை மணற் பரப்பில்
இரவின் இருளில் நிழலொழுகும்!
அலைகளின் இன்னிசையூடே
பிறையை ரசித்திருப்பேன்!

மௌனமான இரவிலும்
என் இதயம் இறைவனை தரிசிக்கும்!
நல்லுள்ளங்களை தடவிக்
கொள்ளும் தென்றல் நான்!

உள்ளத்தின் பாச சுரப்பை
இந்த இரவில் பெருக்கினேன்..

காற்றின் தடவல்களை
தனிமையின் ஸ்பரிசத்தை
இயற்கையின் தழுவலை
வழிந்து நிறையும் மனதின் பரிவு!

வான் முழங்கும் மின்னல் ஒளியுறைவில்
கார் மேகங்களின் புற நீக்கல்
இதயங்களின் வளர்ச்சியும்
ஆழலின் மாறு தவிப்பும்..

நட்சத்திரங்களின் சிதறல்களில்
சுடரைக் காண்போர் எவருமில்லை

கடலை பார்க்கிறேன்
ஆண் அலையும் பெண் அலையுமாய் சீரி பாய்ந்து
என் முகம் கழுவிச் செல்லும்..

தென்றலூடே
தடவிக் கொண்ட சுகத்தால்
சுவாசிக்கும் மூச்சுக்களாய் உணர்வுகள்!

என் இதயத்து லயங்களிலும்.........
நாடி நரம்புகளிலும்............

ரத்தம் சுரக்கும் எலும்பிலும் மச்சைகளிலும்.....
சுற்றி தவழும் என் நினைவு....!
                                   

நோன்பு மாதம்......!

வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து
இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள்  வறியவர்  தீப்பசி  யுணர்ந்து
திருந்திட  அருளிடும்   மாண்பு

மண்ணறை  முஸ்லிம்  மாந்தர்கள்  கூடி
வாழ்த்தி  வரம்   பெறும்  திரு நாள்-அது
தண்மதி  நபிகள்  நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள்  பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள்  வேறாய்
வந்திடும்  பன்னிரு  மாதம்  -அதில்
அருளொளி வீசி  திருமறை   ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

 வாழ்வினை  யுணர்ந்து  தாழ்வினை  மறந்து
வாழ்ந்திட  வழிகளை  காட்டும்  -அது
கூழெளினும் ஏழை குடித்திட  ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய  நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர்  நெஞ்சம்  திருந்திடப் பண்ணும்
திருமறையருள்   நிதம் பொங்கும்'
                                    கலைமகள்  ஹிதாயா றிஸ்வி.