செவ்வாய், 29 மார்ச், 2011

கை கொடுப்பீர்...!!

அத்தான் உங்கள் பார்வையில் கனிந்த
அன்பே தெரிகிறது-காதல்!
பித்தாய் எந்தன் பிஞ்சு மனது
பெரிதாய் விரிகிறது!

கண்கள் என்னும் கணையாலெந்தன்
கனிவுடல் புன்படுதே! -காதல்
கொண்டேன் என்னைக்
கனிவாய் வாழ்வில்
காத்திடக் கை தொடுவீர்!

வேலி இடுக்கால் விழிகளைப் பாச்சும்
வேதனை இனிவேண்டாம்- கழுத்தில்
தாலி கட்டித் தனிக்குடி நடத்தத்
தயாராய் வர வேண்டும்....!

மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு -தூய
காதல் பூவைக் கசக்கும் தீயோர்
கருகும் நிலை கண்டு !

பெண்மை என்னும் பேரின்பத்தை
புரிந்தோர் உயர்வடைவார் -வாழ்வில்
உண்மை இன்பம் கண்டே உய்ய
உடனே வர வேண்டும்....!

தலை எழுத்து உயிர் எழுத்துக்களாய்.....!

எந்த உதவிக்
கரங்களும் என் தலையை
தடவத் தேவையில்லை....!

எந்த-
அனுதாப வார்த்தைகளும்
என்னை
அணுகத் தேவையில்லை...!

நானே....
சுயவிருப்பில்
தேடி தடவிக்கொண்ட
உறவு

என்
ஆபத்தில் உதவிய
ஓர் நன்றிக்கடனுக்காக....!
நான் உயிராய் நேசித்தேன்
நீ,
என்னை-
கடுகளவாவது நேசித்தாயா...?

ஒவ்வரு சொல்லும்
கீரியும் பாம்புமாக.....
போரடித்து மாயும்....

ஒவ்வொரு சொல்லும்
என்னிதயப் பொந்தை அரிக்கும்
கரையான்களாக....

ஒவ்வொரு தகவலும்
என்னுயிரை சுட்டுப் பொசுக்கும்
ரவைகளாக...

நான்
எந்தளவுக்குப் பொறுமையாளன்
என்பது-
உனக்குத் தெரியும்!

என்- மனதின்
ஆழம்
அதன் நீளம்
உனக்கு புரியவில்லை.
ஆனாலும்-
உனக்குத் தெரியும்
என்னைப் பற்றி
எனக்குத் தெரியும்
உன் மனதைப் பற்றி

தாக்கு
ஈராக் யுத்தமாய் தாக்கு.....

உன்னை 'நேசித்த....'
ஒரே ஒரு காரணத்திற்காய்....

நீ-
ஏன் மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாகிப் போனாய்...!

வாழ்ந்த காலங்களை
வருடங்களே
சாட்சி சொல்லும்....?

அடி ஸகீ...!
இப்படி என்னை
கை கழுவி விட
யார்-உனக்குக்
கற்றுத் தந்தது....?

யார் பேச்சில்-
இப்படி-
வாழ்கின்றாய்...?

விரும்பினால்
பதில் சொல்....
நானும்...நீயும்...
நீயும்....நானும்....
சுவாசமும்....மூச்சுமாயிருந்தோம்...

நானும்......நீயும்.....
நீயும்...நானும்......
வானமும்.....பூமியுமாய்.....
பூமியும்.....வானமுமாய்.......
ஒன்றிணைந்து பார்க்க
முடியாதவைகளாய்......

அடி ஸகீ...
என்னை-நீ
புதைகுழிக்குள்
அனுப்பி விட்டாய்....

என் ஸகீ....
உயிர்
உடலை விட்டு
விலகிக் கொண்டிருக்கும்
இந்த-எம்
பரிசுத்த உறவின்
பிரிவு....
எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றம்.....?

உன்னை-
தேடி....தேடி...
பின் தொடர்ந்து
கொண்டிருக்கும்......

உன்னையே....
அழைத்துக் கொண்டிருக்கும்....

திங்கள், 28 மார்ச், 2011

சொல்லு...!!

மூன்று நாட்களாய் :
கிழக்கு மண்ணிலே
பதற்றம் - மனசுக்குள்ளே
போராட்டம்...!

துப்பாக்கிச் சத்தமும்
அழு  குரல்களும்
கேட்குது -என்
இதயம்  மட்டும் பயத்தால்
9.0 சுனாமியாய்
பாயுது...!

சமுர்த்தி கேட்டு ;
விண்ணப்பித்த போதும்-என்
பிரதேச செயலாளர் நட்பிட்டிமுனை பளீலின் உயிரும்
உடலை விட்டுப் போச்சு!!

அசம்பாவிதங்கள் கூடிப் போகுதடி
நாடு-உன்
எழுத்துக்களாலே செழித்திடனும்
எம் தூய உறவு!

புத்தி ஜீவிகளை
ஏனடி கொள்வது....? உன்
இனத்தவருக்கு அவர்கள்
என்னடி செய்வது....?

வெச்சிருக்கேன் தமிழிலே
பற்று-என்
கலை இதயத்தை
தொட்டு!

சமாதானத்தை
ஏற்படுத்த வந்தவனே;
நில்லு-நோர்வேயினரின்
போக்கு என்னவென்று
சொல்லு...?

இலங்கையில்
உயிர் இழப்புக்களை;
தடுத்து நிறுத்து!
இல்லையேல்
ஈழத்தையே அழித்து
நொருக்கு...!!

அந்தரங்க முடிச்சுக்கள்!!!


என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
அது நீ ...

உன்னாலே என் எழுத்து
வாழ்கிறது.
அழகானவை எல்லாமே
எனக்கு உன்னைத் தான்
ஞாபகப்படுத்துகின்றன.

உன் சோகத்தை
நான் அறிந்த போது  தான்
என் சோகத்தில் அது
இரண்டரக் கலந்தது.

உன் கண்ணீரைக் கண்ட
என்மனம் வெந்து
உருகியது.


என்னைப் பார்த்து நீ
சிரிக்க மாட்டாய்
நீ சிரித்த நாளாவது
யார் ஞாபகத்திலும் இல்லை.

நான் உனக்கு
செருப்பாக இருப்பேன்
நீ அணிந்து கொள்வதனால்.

தினம் தினம் நீ
கண்ணீர் வடிக்கிறாய் 
இதயத்தைப் புதைத்துக்
கொண்டு.

நான் உன்னைக்
காணும் போதெல்லம்
விழி மூடிக் கொள்கிறாய்.

நீ வசிப்பதனாலோ என்னவோ
என் கவிதையும் வளர்கின்றது.

உன் முகத்திலுள்ள
பருவாக நான் ஒட்டி நிற்கிறேன்
தினம் தினம்
உன்னை முத்தமிட.

சிலுவையாக உன் முகத்தில் அரைந்த
ஆணியை  கழற்றி

வீசாதே அது நான் தான்.

சோகக் தீயால்
வெந்து உருகிய உன்
இதயத்தைத் தேடுகிறேன்
அதைச் சரி செய்து
தருவதற்கு
விரைவாக நான்
தருவேன்
என் உள்ளத்தையல்ல
சிதறிய உன் இதயத்தைப்
பொருத்தி.

உன் வாழ்வு
எனக்கு கவிதை எழுத
நிறையவே கற்றுத் தந்தது.
என் பரீட்சைக்கு
வினாவும் நீதான்
விடையும் நீதான்.

உன் மனதை புதுப்பிக்க
வேண்டும்
உன்னைத் தொடர
என்னை விடுவாயா?

சுகமில்லாத நீ
வைத்தியரை நாடாமல்
என்னை ஏன்
நாடுகிறாய்?

உன் தோட்டத்து
மல்லிகை கூட
உன் சோகம் தீரும் வரை
மலர்வதில்லையாம்.

நான் திருடியது
உன் சோகத்தை மட்டும் தான்
நான் எழுதுவது
உன்னைத் தான்
இதற்குத் தான் கவிதை என்று
பட்டம் சூட்டினார்கள்.

உன் சோகம் கண்ட
சுவர் கூட குட்டிச்
சுவரானது
உன் பார்வை பட்ட
பச்சை மரங்களும்
கருகியே  மடிந்தன.

விழியில் நீர் வழிய
என்னையும் உற்றுப்
பார்த்தால் நான்
இழந்தேன் என்
இதயத்தை.

உன் கண்ணீரைத்
துடைக்க வந்த நான்
இறுதியில் என்னைத் தான்
தொலைத்தேன்.

உன் பார்வை பட்ட
உலகம் என்னைப் பார்த்து
சிரிக்கிறது.
நீ சிரித்த அந்த கள்ளச்
சிரிப்புக்கு நான் தான்
காரணமென்று.

எத்தனை புத்தகங்கள்
படித்து விட்டேன்
இனி படிக்க வேண்டியது
உன்னை மட்டும் தான்.

உனக்கு எப்படித் தூக்கம்
வரும்
உன் தலையணைக்கடியில்
நான் இருக்கும் போது.


உன் சோகம் எதுவென
எனக்குப் புரியவில்லை.
உன் நினைவுகள்
என்னைத் துரத்தியதால்
உன் இதய அறையில் நான்
அமர்ந்தேன் சுத்தமான சுகந்தமாக.

உன் மனதை நான்
நோகாமல் சுமக்கின்றேன்.
உன் நோய்க்கு மருந்து
நானாக.

துக்கமில்லாமல் வாழ்ந்த
என் வாழ்வு
உன்னால்  சோகங்களையும்
சுமக்கப் பழகின.

பார்க்கத் தான் முயற்சிக்கிறேன்
நீ கடந்து வந்த
புதர் பாதையை,
என் முயற்சி
தோற்றுப் போகும் என்று
புரிந்திருந்தும்
உன் கடந்த காலத்தை
மீட்ட நான் போட்டியிடுகிறேன் .

அன்று எழுதினேன்
ஒரு காதல் கடிதம்
உனக்கு.
அதைப் படிக்க முடியாவிட்டாலும்
கிழிக்கவாவது பெற்றிருக்கலாமே.
உன் விழி அழும் போது
என் மனக் குருதி
கொதிக்கிறது.
நீ இனி அழக் கூடாது
உன் கண்ணுக்குள்
என் முகம்...

உன் வெறித்தனமான
சோகத்தில்
கிழிந்த உன் இதயத்திலிருந்து
வடிந்த குருதியை
என் பேனாவின்
மையாகப் பயன்படுத்தினேன்.

உன்னை நான்
தொடர்ந்த குற்றத்திற்காக
உன் இதயத்தைப்
பூட்டி நீ வைத்தது கூட
எனக்கு ஒரு
தண்டனை தான்....

நீ நடத்தும் புரியாத
அந்த சோக நாடகவெறியில் நான்
தீயில் கரியாகினேன்.....

பலர் என்னை
விரும்புகிறார்கள்
எல்லோர் வாழ்விலும்
ஒரு சோக அனல்
புதைந்து சுடுவது தான் அதிசயம்.

பாவம் நான்
என் இதயத்தை
யாருக்கும் கொடுக்கவும் முடியாமல்
பலரால் வாங்கவும் முடியாமல்
அவதிப்படுவதை உணர்கிறேன்...

என் மனம் எப்படித் தாங்கும்
உன் சோகங்கள்
என் மனதையும்
நெறுக்கிப் பிழிகின்றது.
உன் மனமும்
என் உயிரும்
எழுத்தில் தான்
சங்கமம் ஆகின..
எத்தனை காதலர்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள்.
நானும் நீயும்
சந்திக்காத சங்கமமே...

நீ விரும்பும் எதையும் செய்வேன்
உன்னை மறக்க மட்டும் சொல்லாதே...

நீ இன்றி என்மனம்
எப்படி வாழும்
என் இதயம் உன்
சோகங்களைத் தாங்கும்
துலாபாரம் ஆகும் போது.

நீ வேதனைப்பட வேண்டும்
உன்னை ஆதரித்த நானே
உன்னை மறந்தால்.
நான் அனுப்பிய
வெற்று அஞ்சலை ஏன் நீ
திருப்பிவிட்டாய்.
அதில் இருந்தது
என் வெறுமையான இதயமே.

உன் தனிமையே
உனக்கு ஒரு நோய்.
என்னை பதுக்கி வைத்துக் கொண்டு
ஏன் இன்னும்
விரதம் இருக்கிறாய்.

இத்தனை சோகங்களுக்குள்ளும்
உன் சிரிப்பைக் காண
முடியாது தான் அவஸ்தை.

உன் இதயத்தில்
எதைத்தான் பூட்டி
வைத்திருக்கிறாய்
எதையுமே என்னால்
புரியமுடியவில்லை.

உன் சோகத்திற்கு
ஒரு படி வெடிக்க
இடம் கொடு
தேடிப்பார்க்கிறேன்
அந்த ஓட்டையில்
உன் இதய அண்டாவை..

என் எழுத்துக்களை
வரவேற்ற நீயே
வழியனுப்பி வைத்தாய்
என் கருவே நீயான
போது எக்கருவறைதான்
இனி என்னை ஏற்கும்...?

எப்படி நம்புவது
 உன் மெளத்தின் பின்னால்
இப்படியொரு பாதாளம்
இருக்கும் என்று...

உன்னைத் தேடினேன்
என் எழுத்தைத்
தொலைத்து விட்டு
பேனாவையை ஏன்
திருடினாய்?

யன்னல்களைக் கூட
இருக்க மூடிக்கொள்கிறாய்.
ஏன் என் வாசம்
உன்னைத் தேடும் என்றா?

உன் வாழ்க்கைக்கு
வெளிச்சம் தேடினேன்
இறுதியில்
அந்த வெளிச்சத்திலே
என்னை நான்
தொலைத்தேன்.

நீ நிராகரித்தாலும்
உன்னை நான்
தொடராமல் விடுவேனா
இரவெல்லாம் ஒரு கனவு
நீ என்னைக் காதலிப்பதாக.

இப்போது நீ சிரிக்கிறாய்
அது தான்
உன் முற்றத்து மல்லிகைகள்
பூத்து மனம் பரப்புகிறது.

என்னால் நீ குணமானாய்
உன் நோயை
எனக்குப் புகுத்திவிட்டு.

நீ  எனக்குக் கிடைக்க
முதலே தொலைத்ததாக
நான் தூரத்தில் இருந்து
அவதிப்படுகிறேன்.
உனக்கும் எனக்கும் உள்ள
தூரம் எத்தனை ஜென்மங்கள்.
அவ்வாறு இருந்தும்
என் இதயத்தில் நீ வாழ்ந்தாய்.

உன் சோகத்தை
ரகசியமாய் விசாரித்தேன்.
தெரிந்தும் கை விரித்தவர்கள் பலர்.

நான் வெட்கப்படுகின்றேன்
என் எழுத்துக்களாய் உலகை
வென்ற நான்
உன்னிடம் தோற்றுப் போனேன்....

உன்னில் அப்படியென்ன
பிடிவாதம்
உன்னை விரும்பிய
என்னையே தோக்கடிக்க.
என்னை விடவும்
ஊணமான உன்னை
நேசிக்க எவள் வருவாள்.

நீ சிரித்து வாழ
என் இதயம் திறந்தேன்
களவு போனது
என் இனிய கவிதைகள்.

உன் அழகையே அந்த
ஆபத்து மாற்றியது
அந்த இதயத்திலே
இளைப்பாறுகின்றது என் ஜீவன்....

உன் வார்த்தைக்குப் பஞ்சம்
உன்னை வாழ வைக்க
உன் சோகம் தீர்க்க
உன்னிடமே பிச்சை கேட்கிறேன்.

நான் எதிரில் வரும் போது
நீ குனிவதில் நியாயங்கள் உண்டு....
ஏனென்றால்
உன் நோய் தீர்த்த வைத்தியர்
நான் தானே....?

எதிர்பாராத நேரத்தில்
நீ என்னைக்  கரம்
பிடித்தாய்.
முத்தமிட அணைத்தேன்
என் கைதான் சுட்டது.
நான் தொட்டது நெருப்பு..

நீ பயந்தால்
செத்துப் போவது
நான் மட்டுமல்ல என்
எழுத்துக்களுமே.

அழுது ஏன் வழிகிறாய்
நான் குடியிருப்பது
உன் கண்ணில் .
கண்ணீரைக் குடிப்பதற்கே.

இனி தீர்ந்தது
உன் நோய்
அதற்குப் பரிசாக
உன் இதயத்தை எனக்குக்
கொடு....
நீ தப்பிக்க முடியாமல் என்
சுவாசவழியையும் மூடிடுவேன்.

நீ எப்படியோ நானும்
அப்படியே
உன் சோகத்தில்
என்னைப்புதைத்த
நாள் முதலாய்..

எப்படியும் நீயும் நானும்
தொடர்புபட்டோம்
எழுத்துக்களால்
காதலாக
நட்பாக
எதிரியாக.
நோயாளியாக,வைத்தியராக.
எதுவாக இருந்தாலும்
என்னால் குணமானது
உன் இதய நோய்.

கடைசியாக எனக்கு ஒரு கவிதை
நீ எழுதியனுப்புவாய்
நீ காதலித்தது
என்னையல்ல
என் கவிதைகளையே என்று.

நீ மங்கிப் போனாலும்
உன் நினைவில் வடித்த
என் எழுத்துக்கள்
நூலாகச் சுமர்ந்து வரும்
அப்போதாவது புரிந்து கொள்வாய்
உன் இதயத்தில் நான் வாழ்ந்தது.

உன் பைத்தியத்திற்கு
வைத்தியமான என்னை
பைத்தியம் குணமானதும்
மறந்து விட்டாய்.
என்னைப் போல
துரதிஷ்டக் காரி
பிறக்கவே கூடாது.......!!!

புதன், 23 மார்ச், 2011

விழிமலரைத் திறக்க மாட்டீரா?

நெஞ்சத்தில் துயரமெனும்
அனலை மூட்டி
நேத்திரமாம் ஒளி மலரை
இறுக மூடி
துஞ்சிய தேன் ? என் தந்தை
துடித்து வாடி
தோகை யிவள்  கதறுவதைக்
 கணீராமோ?

'கிழக்கு' மாகாண
மக்கட் கெல்லாம்
அனுதினமும் மருந்து மரமாய்
திகழ்ந்தீர்
ஐம்பத்து இரண்டாண்டு
வாழ்ந்து விட்டு
அரை நொடிக்குள் எமைவிட்டுப்
பிரிந்தே னோ?

தந்தையென அழைக்க இனி
யார் தான் உண்டு
தரணியிலே இனியும்மை
 எங்கு காண்போம்
சிந்தையிலே நிறைந்திட்ட
பாசத் தேரே
சின்னமகள் 'ஹிதாயா 'வின் கண்ணீரைத்
துடைக்க வாரீர்.
நூறாண்டு காலம் நீர் வாழ்ந்திருந்து
நோயாளர் பிணிதீர்த்து எமையும் காத்து
வேரூன்றும் புகழோடு வேந்தே எம்மை
வேதனையே  அணுகாது  மகிழ் வையீந்து
பாராண்ட மன்னவராய்த் திகழ்வீர்ரென்றே
பகலிரவாய்ப் பிராத்தித்தேன்  பயனேயின்றி
நீரேனோ இறையடியை நாடிச் சென்றீர்?
பாவியிவள் புரிந்திட்ட கொடுமை என்னே?

கன்னிமகள் மனக்கோலம் கண்டு நீங்கள்
களிக்கும் நாள்காத்திருந்தீர் ஏனோ இன்று
என்னரிய தந்தையரின் மரணக் கோலம்
ஏந்திழை யான் கண்டலறும் நிலையைத் தந்தீர்?
பொன்னுடலை வெள்ளை நிறப் புடவையாலே
போர்த்தித்தான்  'கபன்' என்றே தூக்கிச் சென்றார்.
அன்பென்னும்  சிறகாலே எம்மைக்காத்து
ஆதரித்த தந்தையை நான் எங்கு காண்பேன்.

சுவர்க்கத்தில் நீர்வாழ சுகங்கள் காண
சொல்லரிய பெருமானார் 'உம்மத்'தோடு
தவமாக நீர் கலக்க முஸ்தக்கீம்  பாலம் தாண்ட
பொல்லாத புதை குழியின் தொல்லை நீங்க
புவிவாழ்வில் நீர் செய்த நன்மையாவும்
பிசகாது உம்மோடு வந்து சேர
தவறாமல் தினந்தோறும் பிராத்திப்பேன்  யான்
தந்தையரே உமதான்மா சாந்தி கொள்ளும்.

புதுமையுடன் கவிவடிப்பேன் பெண்கள் வாழ்வு
புலர்வதற்கே நாள்தோறும் கலைசமைப்பேன்
முதுமை நிலைவருமுன்னர் தந்தை கண்ணை
மூடியதால் கண்ணீரை வடிக்கின்றேனே
விதியென்றே தாயாரும்  உடன்பிறந்த
சோதரரும்  சுற்றத்தார் அனைவரோடும்
மதியிழந்த வானம் போல் கலங்குகின்றோம்
மனதினிலே உமையிருத்தி இறைஞ்சுகின்றோம்.....!!!

திங்கள், 14 மார்ச், 2011

சிகரட்!!!

சிகரட்டை 
மூச்சிகளாய்-
சுவாசித்தவர்கள்...
சிந்திக்கிறார்கள்....
உயிர் வாழ்வதற்கு...!!!

காலடி!!!

வந்தவனின்
காலடி மட்டும்
தெரிகிறது
முற்றத்து வாசலில்...!

பிரசவம் !!!!

பிரசவம்
உறுதிப்படுத்துகிறது
தாய்மைக்கு
தொப்புள் கொடி இருப்பதை...!!

பெண்கள்!!!

பெண்களை-
அவமானப்படுத்தி-
பேசாதீர்கள்..
எழுதாதீர்கள்...
இழிவுப்படுத்தாதீர்கள்...
அவமானப்படுத்தாதிர்கள்....,
அவர்கள்
உலகை விட
மேலானவர்கள்!
உயர்வானவர்கள்!!
பெருமதிமிக்கவர்கள்!!!
புகழப்பட வேண்டியவர்கள்.....
பேணிக்காக்கப்பட  வேண்டியவர்கள்...
பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்....!!

நட்பு....

இதயத்தை கசக்கி
அன்பை வடிப்பது
காதல்...
காதலச் சுரந்து
இதயத்தை ருசிப்பது
நட்பு....

ஞாயிறு, 13 மார்ச், 2011

தாய்!!!!

தாயே,
உயிர் தந்தாய் மண்ணில் வாழ-
பிரிந்ததோ
உன்
உயிர்
மண்ணறையை நாடி...

தவிப்பு...!

மறந்து போனாயா  சகீ !
நீ
என்னை வெறுத்துப் போனாயா...?
சகித்துக் கொள்ள முடியாத
பாரிய துயரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

இமைகளின்
சிமிட்டல்களாய்
மேலும் மேலும்
என் இதயத்தின்
வலியின் அவஸ்த்தைகள்,,!

உன்னை-
மூச்சுக்களாய் சுவாசித்த
ஓர் தூய இதயத்தின் வேதனைக்குள்
உன்னை அழைக்கிறேன்!

பொறாமையாளரின்
போலி வார்த்தைக்கு போனாயே எனும்
வேதனை வினாக்குள்
என் இதயம்
விடை காண  முடியாது
தவிர்த்து நிற்கிறது!

கோபங்களை மறந்துவா
உனக்கான
தூய இதயம்
துடித்து அழுகின்றது!

நீயும்-நானும்
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தைகளே!
ஓர் விசித்திரமான தலைப்புக்கள்
வினா அல்ல.
என் பாசம்
உயிரிலும் மேலானது என்பதை
புரிந்து கொள்!

நான் பாவி.
நீ பெருமதிமிக்க உறவு
என்றோ நம் நட்பிக்கு
உயிர் கொடுத்தபின்
யார் பிரிந்தாலும் என்ன?
பொறாமை பட்டாலும் என்ன?
அவதூறு சொன்னாலும் என்ன?
அவமானப் படுத்தினாலும் என்ன?
நாம் நாமகத்தான்
வாழ வேண்டும்.

சனி, 12 மார்ச், 2011

தூக்கம் !!!

தூக்கம் வருவதை
எப்படி
தடுப்பது
...
மரணம்
நிச்சயிக்கப்பட்ட   பின்....!!

கவிதை!!

சிந்தித்தால்
வருகிறது கவிதை...
நீ
வாசித்தால்
புரிகிறது
வாழ்க்கை...!

உறவுகள்!!!

உறவுகளை
தொலைத்து
வாழ்ந்து விட்டபோது
தான்
உணர்கிறேன்...
அவர்களோடு
வாழ்வதற்கு...!!!!

திங்கள், 7 மார்ச், 2011

உயிர்!

வியர்வை தாங்கும்
உஷ்ண வெட்கையில்
உடம்பு
நிம்மதி மூச்சுகளுக்காக
வாழ்வெல்லாம்
ஏங்கித் தவிக்கும்
உயிர்!

நீரிழிவு!!

வயிற்றில்
பசியெடுக்கும் அவஸ்தைகள்
பட்டனியிருந்தும்
சுகம் பெறாத வியாதியாய்!
அதே தொல்லைகள்;
என் வியாதி சீனியாகி
என் நாவிலேயே இனிக்கும்.

நோவினைகளை உடம்பில் போட்டு
ஓடும் குருதியினை சோதிக்க
இரத்தத்தில் எண்ணிக்கைகளை -
அரிய முயற்சிக்கையில்
நீரிழிவினால் செயலிழந்த
கிட்டினியின் ரகசியம் தெரியவரும்;

உயிரின் மூச்சு
கடந்த காலங்களாய்
சுவாசிக்க தல்லாடும்;
உடல் மெலிவில்
களைப்பு நிறைந்த தவிப்பு
நாவை வறட்சியாக்கிக் கொள்ளும்;

வைத்தியர்களின்
ஆலோசனைகளில்
பல்லாயிரம் ஆறுதல்கள்
மனதை தேற்றினாலும் 
இந்த நோய் நிறைந்த
நிலைமையிலும்
நிரம்பியிருக்கும்  வறுமை!

ஏன்?

நீ கொட்டுகிறாய்!
நீ கொட்டுவதைப் பற்றி
நாங்கள் மனம் குளிர
பேசிக் கொண்டிருக்கிறோம்!

நாங்கள்
சகிக்க முடியாத அழிவுகளை
நீ செய்கிறாய்!
நாங்கள்-
தாங்க முடியாத அவஸ்தைகளைப் பற்றி
கொஞ்சமும்  அறியாமல் அடை மழையாய்
இரவு பகலாய்
நீ கொட்டுகிறாய்!

துயரத்தின் மத்தியில்
வசித்த இல்லத்தை விட்டு
அகதி முகாங்களுக்கு  போன அவலத்தின்
கொடுமைகளையெல்லாம்
நீ அறியாது கொட்டுகிறாய்!

நீ; கொட்டுகிறாய்-என்று
பூமி பொறுமை இழக்கிறது!
ஆனாலும் ஓர் வேண்டுதல்
வருடா வருடம்
இயற்கை அழிவுகளை நேசிக்கும்
எம் வெள்ளை மனத்தையா
பள்ளமாக்கி போகிறாய்.??

வேதனைகளோடு!!!!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

எனதும் உனதும்
தூய்மையான உறவின் மீது
கலங்கத்தை ஏற்படுத்தியவள்
பூனையின் வாயில் அகப்பட்ட எலியாய்!!

பொறுமை-
வெற்றியை சுமந்து செல்லும்!
வயிற்றுக்குள் கதறும்
பசியின் கொடுமையறியாது
அடுப்பு எரியாமல் உறங்குவதாய்!!

மின் கம்பத்தில்
சிக்குண்டுத் தொங்கும்
வெளவ்வால்களின் கோலத்தில்
அந்தரத்தில் ஊஞ்சலாடும்-
 பொறாமை பிடித்த இதயங்கள்.,

நட்புள்ளங்களின் பாசக் குருதிகளை
உறிஞ்சிக் குடிக்கும்
அட்டைகளாய்-சில
இதயங்கள் தேங்கிக் கிடக்கும்!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

ஞாயிறு, 6 மார்ச், 2011

கீழ் வானம்....

மனசு
அடை மழை குளிரில்
சூரியனை காணத்
துடிக்கும்.

அவஸ்தைகள்
என் ஆத்மாவின் கதறல்களாய்
வறுமையை தடவும்!

அரசாங்கத்தின்
ஒரு சிறு நிவாரணப் பொதிகை
என் மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.

தென்றலின்
சுகமான மெல்லிய தடவல்
என் உடம்புக்கு காச்சலை கூட்டும்.

வீட்டு முற்றத்தோடு
தேங்கிக் கிடக்கும் நீரோடை
நுளம்புகளை பெருக்கும்.

இயற்கையின் அழிவுகளுக்கு வளம்
சேர்க்க
என் பிறந்த மண்ணில் இடம் தேடி
கடல் கொந்தளிப்பு....
பெரு வெள்ளம்....
சூறாவளிக் காற்று....
சுனாமி அட்டகாசங்கள் எல்லைகள் மீறும்!

டிசம்பர் மாதம் வருடா வருடம்
என் நெஞ்சில்
ஆறாக் காயங்களை ஏற்படுத்தும்.

மரணத்தின்
நிறந்தர பயணத்தில்
பயணம் செய்ய
ஆத்மாவின் சுவாசம்
மூச்சுக்களை அடக்க துடிக்கும்.

அடை மழை குளிரில்
சூரியனை காண
கண்கள் துடிக்க....
என் எழுத்துக்களை போல்
கீழ் வானம் வெளிக்கும்!
கார்முகில்களுக்குள்!.

தாய்மை!!!!


மழலையைப் பெற்றால் மாது
மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை!
அழகினைத் தாயிற் காணும்
அழகுக்கு உவகை இல்லை!
“கொழு கொழு” உடலைத் தூக்கிக்
கொன்சிடல் அழகு- பிள்ளை
அழுகையும் மிக அழகு
அகிலத்தின் பேரழகு!
உலகின் கருணை வெள்ளம்
உதிப்பது தாயின் உள்ளம்.
மழலையைப் பெற்ற மாது
மாண்புறு பெண்மை தானே!
தாய்மையே பெண்மையாகும்
தளிரென மழலைச் செல்வம்.
வாழ்வினில் பெற்றெடுத்தல்
வளமான செல்வமாகும்!
விளை நிலம் பெண்ணேயாவாள்
வேறெதற் குவமை சொல்வீர்.
அழகினில் தாய்மை மேலே
அடுத்தவை யாவும் கீழே!

கணவனே உயிர் !


கணவனை உயிரெனப் பேணுங்கடி! -அவன்
காதலை நாளுமே! போற்றுங்கடி!
குணத்தினில் வாசுகி ஆகுங்கடி-நல்ல
குங்குமம் நெற்றியில் பூசுங்கடி!
அன்பினால் கணவனை ஆளுங்கடி-தினம்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்குங்கடி!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடி-உயர்
தூய்மையை நாளுமே ஆக்குங்கடி!
கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடி-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணுங்கடி!
அற்புத மகவினை ஈனுங்கடி-அதை
அருமையாய் வளர்த்தின்பம் காணுங்கடி!
இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடி-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்றுங்கடி!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடி-என்றும்
வீணான கொள்கையை வீசுங்கடி!
அரைகுறை ஆடையைத் தள்ளுங்கடி-நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடி!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடி-என்றும்
கணவனை உயிரெனப் பேணுங்கடி!

அன்பு!!!!!

வாழ்வுச் செடியின்
அன்பு மலர்களை
உறவுத் தென்றல்
தழுவிச் செல்லட்டும்!

அல்லாஹ்வே அறிவிப்பாயா …….

இதோ
இஸ்ராயீல்
என்னை;
நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு  முன்
அறிவிப்பாயா?
அல்லாஹ்வே  நீ  எனக்கு
இஸ்ராயீலிடம்
துப்பாக்கிக்  கொடுத்தா,துரத்திவிட்டாய்?
இன்றேல்
வெட்டு வாளுடனா  வெளிக்கிடவைத்தாய்.
அதுவும்  இன்றேல்
கண்ணிவெடி  கொடுத்துக்
காத்திருக்க  வைத்தாயா……?
அல்லாஹ்வே
இதை  எனக்கு
அவசரமாய்  அறிவிப்பாயா..?

தலைக் கனமாய் வாழேன்….


தூய இஸ்லாம்!  வழியில் பிறந்தேழுந்தேன்!
மடமை யனைத்தையும் வீரமாய்  துடைத்தெறிந்தேன்!
ஈமான்  தனைக் கொண்டு  புத்தியாய்நடை  பயின்றேன்!
மாற்றம் படைத்து வைப்பேன்! அறியமை அகற்றி வைப்பேன்!
திருமறை ஓதலோடு: மார்க்கக் கல்வியை நான் கற்றேன்!
உயிர் பிரியும் நாள் வரைக்கும் தீனுக்காய் நான் துடிப்பேன்!
வீண் விரயயின்றி  இறை வழியில் செலவளிப்பேன்!
சுவாசிக்கும் மூச்சியிலும் கலிமாச்சொல்லி மகிழ்றிருப்பேன்!
அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்த பெண்ணல்ல
உண்மை முஸ்லிம் வயிற்றில்! அவதரித்த ஈமானியப் பெண்
இறை வணக்கத்தை இன்பமுடன் கடைபிடித்தவள் யான்
திசை மாறி வசை படி தலைக்கணமாய் வாழேன் யான்
மார்க்கப் போதனையை மழையாய் பொழியும்
தித்திக்கும் தேனாற்றல் தானாகப் பெற்றவள் நான்
எத்திசைப் போனாலும் என்னிதயம் அல்லாஹ்வை
வணங்கிப் போற்றிறிற்கும்! புகழினை பாடி நிற்கும்!

இங்கேயும் ஒரு ஓலம்..

இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…!
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு
இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு!

நல்லறங்கள் பெற்றிடுவாய்!!

கொள்கையிலே சிறந்த நல்ல குலமகளே!
கோலமிட்டு வாசலிலே நிறைப்பவளே!
உள்ளமதில் உவகை தரும் மனைவிளக்கே:
உனக்கெந்தன் வாழ்த் துண்டு ஏற்றிடுவாய்!
அன்னத்தின் அழகு நடை உனக்கு உண்டு!
அன்புள்ளம் உன்னிடமே நிறைய உண்டு!
எண்ணத்தில் நல்லொளிர்வு உனக்கு உண்டு!
இறும்பூது எய்துகிறேன் உன்னைக் கண்டு!
இல்லறத்தில் நல்லறத்தைக் கண்டிடுவாய்!
இன்பத்தை தினமும் நீ நுகர்ந்திடுவாய்!
வெல்லுகிற பாதையிலே பயணஞ் செய்வாய்!
வெற்றிகளை வாங்கி நிதம் வாழ்ந்திடுவாய்!