புதன், 23 மார்ச், 2011

விழிமலரைத் திறக்க மாட்டீரா?

நெஞ்சத்தில் துயரமெனும்
அனலை மூட்டி
நேத்திரமாம் ஒளி மலரை
இறுக மூடி
துஞ்சிய தேன் ? என் தந்தை
துடித்து வாடி
தோகை யிவள்  கதறுவதைக்
 கணீராமோ?

'கிழக்கு' மாகாண
மக்கட் கெல்லாம்
அனுதினமும் மருந்து மரமாய்
திகழ்ந்தீர்
ஐம்பத்து இரண்டாண்டு
வாழ்ந்து விட்டு
அரை நொடிக்குள் எமைவிட்டுப்
பிரிந்தே னோ?

தந்தையென அழைக்க இனி
யார் தான் உண்டு
தரணியிலே இனியும்மை
 எங்கு காண்போம்
சிந்தையிலே நிறைந்திட்ட
பாசத் தேரே
சின்னமகள் 'ஹிதாயா 'வின் கண்ணீரைத்
துடைக்க வாரீர்.
நூறாண்டு காலம் நீர் வாழ்ந்திருந்து
நோயாளர் பிணிதீர்த்து எமையும் காத்து
வேரூன்றும் புகழோடு வேந்தே எம்மை
வேதனையே  அணுகாது  மகிழ் வையீந்து
பாராண்ட மன்னவராய்த் திகழ்வீர்ரென்றே
பகலிரவாய்ப் பிராத்தித்தேன்  பயனேயின்றி
நீரேனோ இறையடியை நாடிச் சென்றீர்?
பாவியிவள் புரிந்திட்ட கொடுமை என்னே?

கன்னிமகள் மனக்கோலம் கண்டு நீங்கள்
களிக்கும் நாள்காத்திருந்தீர் ஏனோ இன்று
என்னரிய தந்தையரின் மரணக் கோலம்
ஏந்திழை யான் கண்டலறும் நிலையைத் தந்தீர்?
பொன்னுடலை வெள்ளை நிறப் புடவையாலே
போர்த்தித்தான்  'கபன்' என்றே தூக்கிச் சென்றார்.
அன்பென்னும்  சிறகாலே எம்மைக்காத்து
ஆதரித்த தந்தையை நான் எங்கு காண்பேன்.

சுவர்க்கத்தில் நீர்வாழ சுகங்கள் காண
சொல்லரிய பெருமானார் 'உம்மத்'தோடு
தவமாக நீர் கலக்க முஸ்தக்கீம்  பாலம் தாண்ட
பொல்லாத புதை குழியின் தொல்லை நீங்க
புவிவாழ்வில் நீர் செய்த நன்மையாவும்
பிசகாது உம்மோடு வந்து சேர
தவறாமல் தினந்தோறும் பிராத்திப்பேன்  யான்
தந்தையரே உமதான்மா சாந்தி கொள்ளும்.

புதுமையுடன் கவிவடிப்பேன் பெண்கள் வாழ்வு
புலர்வதற்கே நாள்தோறும் கலைசமைப்பேன்
முதுமை நிலைவருமுன்னர் தந்தை கண்ணை
மூடியதால் கண்ணீரை வடிக்கின்றேனே
விதியென்றே தாயாரும்  உடன்பிறந்த
சோதரரும்  சுற்றத்தார் அனைவரோடும்
மதியிழந்த வானம் போல் கலங்குகின்றோம்
மனதினிலே உமையிருத்தி இறைஞ்சுகின்றோம்.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக