புதன், 5 ஜனவரி, 2011

சிந்தித்தாயோ?????

தாய்க் குலமே  நீயின்று
தனித் துவத்தை இழந்ததுமேன்?
ஆய் விங்கே நடத்தவில்லை
ஆனாலும் உன்நிலை கண்டதினால்
பாய்ந்து வரும் வேதனையை
பகிர்ந்திடவே நான் முயன்றேன்
தேய்ந்து வருமுன் நிலைபற்றித்
துளியேனும் நீ சிந்தித்தாயா?

ஒரு காலம் கல்வியறிவில்
உனக்கக்கறை அவ்வளவாய்
பெருகி வரவில்லை யெனினும்
பெருமித மடைகிறேன் நீயின்று
அறிவன்ன!ஆய கலைகளென்ன!
அனைத்திலுமே ஆண்களுடன்
சரி நிகராய் முன்னேறும்
சாதூரியம் பெற்றுவிட்டாய்.

உயர் கல்வி கட்பதுவும்
உத்தியோகம் பார்பதுவும்
பயன் நல்கும்.என்றாலும்
பொறுப்புள்ள தாயாய் நிதம்
நயங் கொண்டே இயங்குவதில்
நீ காட்டும் ஆர்வத்தால்
பயன் அதிகம் இல்லையன்ற
புதிர் உனக்கும் புரியவில்லையா?

இன்று பல வாலிபர்கள்
ஏன்? வாலைக்குமரிகளும்
பண்பாடு கலாச்சாரம்
புனித முறும் ஒழுக்க நலன்
என்னவென்று தெரியாது
அகம் போன போக்கினிலே
சென்று கொண்டே இருக்கின்ற
சங்கதியை நீ அறியாயோ?

தான் பிறந்த தாய் நாடே
தனக்கென்றும் பொன் நாடாம்
வான் முகட்டில் வாழ்ந்தாலும்
விண் வெளியில் ஊர்ந்தாலும்
மேன்மையுறத் தன் நாட்டின்
மேன்மைக்காய் ஒவ்வொரு
ஆண் மகனும் பெண்மணியும்
அரும்பணி புரிதல் கடமையே!

இன்றேனோ  அநேகரிடம்
இல்லையென்றோ இப்பண்பு
நன்கிதனை ஆய்ந் திட்டால்
நிச்சியமாய் உன் தவறே
மன்னிப்பாய் மாதாவே!
மதலைக்கு நீயூட்டும் பாலோடு
அன்பகிம்சை நாற்றுப்பற்று
அழுதா நீ ஊட்டினையோ?

மறந்து விட்டேன் 'மகராசி'
மேனியழகு கெடுமென்று
வெறும் புட்டிப் பாலையன்றே
விரும்பி நீயும் ஊட்டுகிறாய்.
பெருகி வரும் தாய்ப் பாசம்
புனித முறும் தேசப்பற்று
அருகி வரும் காரணமே
இன்னும் புரியவில்லையா?

கற்றாய்ந்து நன் முறையில்
கடமைகளைச் செய்யாது
பெற்றோரையும் மதியாது
பெரியோரையும் மதியாது
கற்பிக்கும் ஆசானையும் மதியாது
கடும் போராளிகள் போல
பற்பல இளைஞர் யுவதிகளும்
பாவிகளாகி அலைகின்றார்.

சோலைக் கிளி ஆனபல
சுதந்திரத் தாய்மாரின்
வேலைக்காரப் பெண்களின்
வீட்டு ஆயாமார்களின்
சோலைத்தலைப்பில் வளர்கின்ற
சேய்களுக் கெங்க தாயன்பு?
ஆல் போல் வளர்ந்து நித்தம்
ஆர்க்கப் போதிய வாய்ப்புண்டு.

வரலாறு படைத்த பல
வீர மணித் தாய்மார்கள்
சரித்திரமே அன்னோர்கள்
சமூகம் நாடு உயர்வடைய
அரும் பணிகள் புரிந்ததனை
அழகாகச் சொல்லுவதைத்
தெரியவில்லை யெனில் மீண்டும்
தெளிவாகப் பயின்றிடுவாய்.

இந் நிலை நீடித்தால்
எதிர் காலம் நிலையற்று
அந்த ரத்தில் வாழுகின்ற
அவல நிலை நிச்சியமாய்
வந் தெங்கள் அனைவரையும்
வாட்டி விடும் அறிவாயோ!
நொந் துள்ளம் தளராதே
நெஞ் சுறுதி பூண்டிருவாய்!

அடங் காத காளையர்கள்
அறம் மதியா வாலிபர்கள்
மடம் போணக் கன்னியர்கள்
மாற்றானின் நாகரிகம் தத்துவங்கள்
உடன் கொண்டு-நன்னெறிகள்
உதா சீனம் செய்தந்தோ
தடம் புரளும் இளஞர்கள்
திருந்த வழிசெய்தல் உன்கடனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக