திங்கள், 24 அக்டோபர், 2011

நேரத்தை வீணக்க ,
விரும்ப வில்லை !
பொழுதுபோக்குவதற்க்காக
நான் ...
கவிதை எழுதவில்லை ..!
நிம்மதியாக மூச்சுக் கூட ,
விடவும்
முடியவில்லை ...!

என் கரங்கள் எழுதுவது
கவிதைகள் அல்ல ,
என் மண்ணின்
பெரு மூச்சுக்கள் ...!
மனதின் வேதனைகள் ..!
ஆத்மாக்களின் துயரங்கள் ...!

உங்கள் பாராட்டுக்களை
நான் ...
ஏற்றுக்கொள்ள
தகுதியானவளும் அல்ல ...!
கவியாத்துமாவும் அல்ல ...!

நீங்கள் ..,சந்தோசத்தை
என் எழுத்துக்களில்
பகர்கின்றீர்கள்
ஆனால் ..
என் மண்ணின்
வேதனைகளும் ...,
சோதனைகளயும் ...,
உள்வாங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஜீவன் ...!!
சட்டத்தை மதிப்பவராய் வாழு ..!
சாதி வெறியராய் வாழதே ...!!
நேர்மை உள்ளவரோடு நட்பு வை ...!
நேர்மை இல்லாதவரோடு நட்புவைக்காதே ...!!
பெரியோரை மதிப்பவர்களோடு உறவு வை ..!
பேராசை உள்ளவர்களோடு உறவு வைக்காதே ...!!
நீதியை சுருட்டுவோரை நம்பாதே ...!
நீதி தவறுவோரை நேசிக்காதே ....!!
சுரண்டி வாழதே ..!
சூதருடன் சேராதே ...!!
தோழி ,
மண்ணுக்குள் துவண்டு போகும்
சருகுகளாய் வாழதே ..!
நீ
மண்ணில்
ஆழம் மரம் போல்
வாழ்ந்து காட்டு ...!!
இந்த சின்ன மனதில் எத்தனை,
கனவுகள் ...
கற்பனைகள் ...
எதிர்பார்ப்புக்கள் ..
ஆசைகள் ...
நிழலாடும் துயரங்கள் எத்தனை..!

உணர்வுகள் எல்லாம் வாடிப் போன பின்
உயிர்களின் பெறுமதி விளங்கும் ..!

விடியல் மாறும்
இரவோ
நீரில் போட்ட உப்பு போலத் தான் .

பாசம் உள்ள நட்புள்ளங்கள்எல்லாம்
நான் காட்டும் அன்பை மதிக்காமல்
போவீ ர்களாயின் கவலைப்படுவீர் ...!
பாசத்தைக்காட்டும் நற்செயலை தொடர்ந்து காட்டுவீர்

பழகிப பார்க்கையில் தேடிய உறவு
சொன்னேன் ...,
நட்புக்குள்ளே மெய் இதுவே ...!!
தோழி...,
எல்லை யின்றி ,
தொல்லை கொடுக்கும்,
கொசுக்களை விட
கொடுரமானது ...!
இந்த ..
மண்ணில்யுள்ள (அகதி முகாங்களில் )
நாம்
அனுபவிக்கும் துயரங்களும் ....
கஷ்டங்களும் ....,
வேதனைகளும் ...!
ஊற்றை விழுங்கி உயர்ந்திடு ...!
ஆற்றலை அழித்து விழுந்திடாதே ...!!
ஆங்கிலத்தை நேசித்துப் பேசு ..!
தமிழினை மதித்துப் பேசு ..!!
தோழி ,
நீ -
சந்தித்துப் பேச முன்
சிந்தித்துப் பேசு ...!
வல்ல இறைவனின்
அருட் கொடைகளுக்கு தவமிருக்கும்
பூமித் தாயின்
மனசு சிரிக்க
மேகத் தோழன்
வீசும்
சொளகப்பொறிகளோ
மழைத் துளிகள் ....!!
தோழி ,
என் பாசத் தாய்.
எனக்கு தந்த
தாய்ப் பாலை விட,
புனிதமானது
அவள் எனக்காக சிந்திய
வியர்வைத்துளிகள் ...!
சிசுக்கள்
பசியில் கதறும்
தாக தாவிப்பில்
துடிக்கும் உறவுகள் ...!
தாயின் குருதிக்காக
ஏங்கித் தவித்திருக்கும்
மழலைச் செல்வங்கள் ...!!

சனி, 15 அக்டோபர், 2011

பொறுமை வாழ்கையின் வெற்றி ...!
பொறாமை வாழ்கையின் தோல்வி ...!!
அறிவை தேடிச் செல் ...!
ஆற்றலை வளர்த்துக் கொள்...!!
ஒற்றுமையை வளர்ப்போம் ...!
வேற்றுமையை தடுப்போம் .....!!
உண்மைக்கு சாட்சியாக இரு ...!
பொய்க்கு சாட்சியாக இருக்காதே ...!!
நேரம் போவதை நினைத்து கவலைப்படாதே ..!
நேரம் வருவதை நினைத்து சந்தோஷப் படு ...!!
எண்ணத்தில் உறுதியாய் இருந்து வாழு ...!
உறுதியான எண்ணத்தை இழந்து வாழதே ...!!
நல்ல வாய்ப்புக்களை பயன் படுத்திக் கொள்...!
கெட்ட வாய்ப்புக்களை பயன் படுத்திக் கொள்ளாதே...!!
இன்று
கிழக்கு வானில்
மேகம் பரவி வருகின்றது
சூரியன் _
உலா வரவில்லையே ...?
தோன்றிய கிணற்றில் :
கசியும் _
நீரை விட :
ருசியாய் இருக்கிறதே .!
ஆகாயத்தில் இருந்து பொழியும்
மழைத் துளி ..!!
திறந்து இருக்கும்
வீட்டில் _
புகுந்து தடவிய காதல்
காற்று ...!!
சகி;
அவன் _
நன்றியுள்ள ஜீவன்
ஒரு நாள் பேசிய
கணவனின் தங்கையுடன் ...!
துயரங்களை துடைத்து வாழ்வீர் ...!
வலியினை பொருத்து வாழ்வீர் ...!!
சாய்ந்த மருது
மக்கள் துயரின்
ஒரு சிறு துளியே
தனி மாநகரத் துயர் ...!
இலக்கன வழுவின்றி கவிதைஎழுது ...!
மரபுக் கவிதை புரிந்து எழுது.....!!
கவிதை எழுத
இனி _
என்னால் முடியவில்லை .!
மரணத்தை
நோய்யோடு...;
தடவிக் கொன்டிருப்பதால் ...!!
கலையுலக நதியில்
உன்னை நீயே
தூய்மையாக்கிக் கொள்..!
அதில் -
பிரகாசிப்பது
நானாகவும் இருக்கலாம்
நீயாகவும் இருக்கலாம்..!!
உன்னருகே ;
நான் வந்த போது
நீ -
உமிழாய் துப்பியது
வெ ற்றிலை துப்பினியல்ல
உன்னை சுமக்கும்
என் ஆத்மாவின் குருதித்துளிகள் ...!
அலை போல் பொங்கும் :
என் சிந்தனைக் கடலில்
நீ கவிமீன் பிடிக்க வா ..?
இல்லையென்றால் _
பிணமாகச் செல்லும்
ஆழியகடல் பயணத்திற்கு :
பணமாகப் பெற வா ...?
தேயிலைச் செடியோடு
தேய்ந்து போகும்
ஏழைக் கரங்கள்!
கூடைகளைச் சுமந்தே
கூனிப் போகும் தோள்கள்!
வயிற்றுப் பசிக்காய்
வாழ்வைத் தேய்க்கும்
நாயகர்கள் - இவர்கள்
மலையகம் பெற்ற
மனிதப் பிறவிகள்!
உள்ளதின் விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித் தளங்கள்---

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச் சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை பூக்கள்!

ஒருயுக -விடிவில்
கலை நோய் பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய் மலிந்த
புதுக் கவிதை தொகுதிகள்----

தளம்பி வீழும்
மரபுகளில்
ஒரு சிறு
வழுக்கலை நீக்கும்
புது வடிவங்கள்!
கசிவுகளாய்
உள்ளத்து ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப் பதிவுகள்
தனி ரகமாய் ஜொலிக்கும்

விமர்சனம் வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்
இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்... தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....!!

தேயிலை செடி...!

பாட்டாளி 
எங்களின்
"குருதி " வியர்வை 
நீராக வடியும் போது
தான்
இந்தத் 
தேயிலை செடிகள் 
சிவப்பைத் 
தருகின்றன.....

தரையில் மலர்ந்த பூ...

குறுவிழி அசையும்-குவிந்திடும் இதழின்
முறுவலில் விளையும்-மோகனப் புன்னகை
நறுந்தேன் ஒழுகும்-இதழிடை திறந்து
வருந்தேன் மழலை -அமுதம் வடியும்!

தமது இத்தமிழ்ச் சொற்களைப் போலும்
பூ மது இதழ்களில் புன்னகை விரிய
தாமரைப் பூவோ தரையில் மலர்ந்து
ஆமது அழகின் அற்புதக் காட்சி!

உன்னில் தன்னையும் உயிர்க்கலந் தானையும்
கண்ணில் காணும் கவினுறு வடிவே
பண்ணில் இசையே! பாவிடை நூலே!
கன்னற் சாற்றில் கலந்து வானமுதே!

தாயின் குருதியை தமிழோடு சேர்த்து
பாலாய் பருகிடும் பசுங்கிளியே,நீ
கேளாய் கேளாய் கின்கினிக் குரலில்
தோலாத் தமிழில் ஒரு சொல் கிளர்ந்தால்
வாழ்வே அதுவாய் மகிழும் நெஞ்சம்
அன்னையின் இதயம் ஆனந்தம் கொள்ள
என்னருத்  துறையெல்லாம் இனியளாய் வாழ்க!
இருளினை அகற்றும் இரவியாய் நெஞ்சின்
இருளினை அகற்றும் மதி கதிர் பரப்பி

 செம்மல் நீயெனசெகத்தோர் போற்ற
செயலால்  தீமைத் தூசுகள் நீக்க
நன் மகனாய் நீ நலமுடன் வாழ்க!
என் தமிழ்க் கவிபோல் என்றும் வாழ்க!
தமிழ் போல் வளர்ந்து
தமிழ் போல் வாழ்க!!!!!

அவமானம்.......

என் உயிரின் சுவாசங்களுக்குள்
மூச்சுக்களாய் தடவிச் செல்லும்
உன் நினைவு
உன் துயரங்களுக்காய்
வருந்தும் என் இதயம்.
உன் நினைவுகளின் நகர்வில்
நிழலாகும் மனசு.
எதிர்பார்த்திருக்கவில்லை.
என் குழந்தைகளின் குருதியாய்
நீ பிறந்திருப்பாய் என்று.

வாழ்க்கைப் புத்தகத்தில்
முன்னுரைப் பக்கங்கள்.
பிறப்பை உறுதிப்படுத்த
நான் உன்னை
தரிசிக்கக் கூடும்.

என்றும் உறவு
நிலைத்திருக்கிறது.
அப்பத்தா ,
தினம் சொல்லும் அறிவுரை
மலத்தைக் கண்டால் மிதிப்பான்
நீரைக் கண்டால் கழுவுவான்.
பாடலாய் செவிப் பாறைகளில்
ஒலிக்கும் அவமானம்.......

சிரிக்கும் வயிறுகள்...!

பசியினைத்
துரத்திச் செல்லும் வயிறுகள்
வறுமையினை சந்திக்கும்!

சிறு குடலை
பெருங் குடல் மிதித்து
நித்தம் போரடித்து
பாம்பும் கீரியுமாய் மாறும்!

விடியும் பகல்களும்
மறையும் இரவுகளும்
பசி
பட்டணிகளோடு
உதித்து  மறையும்!
மறைந்து உதிக்கும்!!

தாயிடமிருந்து
வெட்டியெடுத்த தொப்புள் கொடி
அந்தரத்தில் ஊஞ்சலாடும்!
என் வாழ்க்கை கருவூலத்தை
தரிசிக்காது!

ஏழ்மைக்குள் அழகு சுரந்த
கற்புச் செடிகளில்
என் போர்வை மூட்கள்
மானம் (தேடும்,காக்கும்)

இருந்தும்
சமூர்த்தியின் பட்டியலில்
அகதிகளாக...........
அனாதைகளாக..........
யாசிப்பவர்களாக.........
வறுமையாளர்களாக நாம்!

இன்னுமொரு சுனாமியால்
சூறாவளியால்..................
நில நடுக்கத்தால்................
வெள்ளப்பெருக்கால்
இந்த இயற்கை அழிவுகளால்
மட்டுமே மீண்டும் வயிறு சிரிக்கும்.

மனம் குளிரும்!
பணம் குவியும்!
பொருள் நிறையும்!
உறவு தொடரும்!
ஆதரவு கிட்டும்!!

தீ.......!!!!

என்னுடைய  நகர்வுகளில்
 என்னை  தொடர்ந்து   நடக்கவும்  முடியாது!
 தடுக்கவும்  முடியாது!!

 வாழ்க்கையின்  வறுமை  போரட்டத்தில்
 பசி தீ  எரிந்து  செல்கையில்
சாம்பலாகிறது
என்னை  தாங்கிச்  செல்லக்  கூடிய
வயிறு .....
    
பெருங்குடலை   சிருகுடலும்
சிருகுடலை   பெருங்குடலும்
 நோன்றி  எடுக்கின்ற  வேதனைகள்
  தாங்க  முடியாத  பசியுடன்
  
வறுமையில்   உருக்குலைந்து  கதறி துடிக்கும் பிறவி நான்
பொறுமை    இல்லையேல்
மண்ணோடு  மண்ணாகிப் போகத் து டிக்கும்  சடலம்  நான்
யாசகம்    கேட்பதை   வெறுக்கிறேன்
  
வீடு வீடாக சென்று அவமானப் படுவதயும்
வேதனைப்படுவதயும்   தவிக்கிறேன்

கைக்கு  எட்டாதது  வாய்க்கு  எட்டாது 
வாய்க்கு எட்டாதது    கைக்கு   எட்டாது

வெந்த  புண்ணில்  முள் குத்தியது  போல்  மனசு
இநதவறுமை வாழ்வின்
ஏதோ  ஒரு  ஏக்கததுடன்
எங்கோ   ஒரு    படுக்கையில்
எனது  துயரம்  மாறலாம்
மாறாமலும்  தொடரலாம்

வாசம் சுமக்கும்....!!

மனங்களில்
மலர்ச்சிப் பூக்கள்
விரியும் போது
மனசு மணக்கும்
வாசம் சுமக்கும்.

எதிர்பார்ப்புக்கள்
உள்ளச் சுவரில்
நிழலாடுகையில்
பின் தொடர்கின்ற
நினைவுகள்
நிழல்ளாகும்

நம்பிக்கை
தொலைக்கப்படும் போது
இதயம்
தீக்குள் சுடரினைத் தேடும்

உண்மைகள்
போலியாகிப் போகையில்
மனம்
பொன்னாடைகள்
போர்த்திக் கொள்ளும்

கவிதைகளை
விதைத்து விட்ட மண்ணில்
விமர்சகர்களின்
போலித் தூறல்கள்

புனிதம்
தீமைகளை புதைத்து விட்டு
நல்லவர்களுக்கு
வழிகாட்டுகிறது

இறைவா
இந்த சோதனையாளர்களுக்கு
நல்வழி காட்டு
மனங்களின் பிராத்தனை
துளிகளில்

பொறாமைகளை -
போட்டிகளை -
தாக்குதல்களை -
வளரவிடாது தடுப்பதை
எல்லாம் ஒன்று சேர்த்து
கழுவிக் கொள்ளட்டும்..!
அல்லது சுத்தம் செய்யட்டும்....!!

பார்வையின் புருவங்களாய்....!

பாசம் தொலைந்து விட்டது
எம் உறவு
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து
வரண்ட நிலமாகிய பின்...

பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்
நினைவுத் துளிகள்...
வாசித்த நா மட்டுமல்ல!

எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்
அதுவும்
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!
(தீயோடு-தீயாயிற்று)

இன்று
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...
உறவிழந்து
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தந்தவர்கள்,
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!

உன் எழுத்தில்
உன் பேச்சில்
உன் அன்பின் ஆழம் கண்டு!

நாம்-
ஒவ்வொரு நிமிடமாய்
சுவாசித்து...சுவாசித்து-
மூச்சிடும் வேளை,

அதில் உன் உருவம் இல்லை!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி
உரிமையாக்கி விடுகின்றன...

நீ
கலக்கமில்லாத வெள்ளையுமாம்!
நீ-
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு
பார்வை புருவமாம்!
பிரிக்க முடியாதாம்!!

பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு
நிம்மதியிழந்து இருந்தோம்.

"உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென"
ஆறுதல்படுத்திச் சென்றனர்,
உன் குழந்தைகள்..

நட்புகள் என்று தான் மாறும்....?
தூயவுள்ளங்களைத் தானே அது
தேடியலைகிறது....!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

உறவு...

எனக்கும் உனக்கும்
உள்ள உறவு
தொப்புள் கொடியில் வெட்டப்பட்டதாக
நீ நினைக்கலாம்

நினைவுகள் எதுவாயினும் சரி
ரத்த உறவுகள்
புனிதமானவை....
பெறுமதியானவை....
பலமானவை உனக்கு
எனது பலநூறு
நட்புள்ளங்களை விட

பாசத்தினை சுவாசமாக்கிக் கொண்டே
மூச்சுக்களோடு
கலந்திருக்கும்
உணர்வுகள்
உடலுக்குள் குருதியாக பீச்சும்
உணர்ச்சிகளின் துடிப்பு உனக்கு புரியாதவை

உனக்கு உள்ளது போல்
நட்புள்ளங்கள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
பெண்ணினத்தை சேர்ந்தவர்களாக
இருக்கிறேன்
பொறுமையின் சின்னமாக
வாழ்ந்து வருகிறேன்..

எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஒரே இரத்தத் துளியில் கலந்ததே!
என் உறவுக்கான
தொடர்பு அல்ல!
தொடர்புகளுக்கான
உறவுமல்ல!!

வியாழன், 6 அக்டோபர், 2011

உலகம் மதிக்க வாழ்ந்து காட்டு ...!
மானிடம் தூற்ற வாழ்ந்து காட்டாதே ...!!
தோழி ;
புரிந்து கொள் -
உண்மையும் நேர்மையும்
என்
நட்பின் இரண்டு கண்கள் ...!