சனி, 30 ஏப்ரல், 2011

மகிமை...!!!

எங்கள் நாட்டின்
மாண்புமிகு தலைவர்களின்
மகிமைகளை இயம்புவது
பட்டம் பதவி அல்ல
சுற்றியிருக்கும்
துப்பாகிகள் தான்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மனிதப் பிறவிகள்!!!

தேயிலைச் செடியோடு
தேய்ந்து போகும்
ஏழைக் கரங்கள்!
கூடைக ளைச்சுமந்தே
கூனிப் போகும் தோள்கள்!
வயிற்றுப் பசிக்காய்
வாழ்வைத் தேய்க்கும்
நாயகர்கள் - இவர்கள்
மலையகம் பெற்ற
மனிதப் பிறவிகள்!

நிகழ்வுகள்.....

நினைவுகளை ஈரமாக்கும்
நிகழ்வுகள்...

கடந்து விட்ட
காலங்களை
எண்ணி வாழும்
இதயம்...

சமூகச் சந்தையில்
புரட்சி சப்தங்களின்
எதிரொலிகள்.....

நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை
ஏய்க்கும் வாழ்வு....

இடையில் .....
ஏந்திழை என்
இலட்சியத்தின்
விடிவு நோக்கும்
விடாமுயற்சி.....

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

அல்-குர்ஆன்...!!

அருள் பொலியும் குர்ஆன்! இஸ்லாத்தில்
தேனாய் இனிக்கும்! திருக் குர்ஆன்!
வியாகுலத்தை விட்டின்பம்.
வேண்டுமட்டும் நல்கிடும் குர்ஆன்!

ஏழை எளியோர் பேதத்தை
இல்லா தொழித்து இவ்வுலகில்
வாழும் முஸ்லிம் மாந்தர்கள்!
ஓதிடும் புனித திருக் குர்ஆன்!

அறமும் அன்பும் அமைதியதும்
அகிலந்தன்னில் வழங்கிடவே!
இறங்கிய புனித குர்ஆனே
வற்றாத நன்மை தருவாயே!

நீதி எங்கும்  நிலைத்திடவே!
நீசர் தொல்லை தொலைந்திடவே
மனமெல்லாம் மகிழ்ச்சி காண
அருளினை தருவாய் அல்-குர்ஆன்...!!

சனி, 16 ஏப்ரல், 2011

பெற்று விடாதே!

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே
தாயே-
கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே!

பஞ்சமா யாதகங்கள்
இரக்கமில்லா இதயங்கள்
இறைவனின் சோதனைகள்...வேதனைகள்...
நிறைந்த இந்த மண்ணில்
மனிதனாய் பிறவாத வண்ணம்...

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே.!

நீ-
கருவோடு! பிறப்போடு போராடு
கருவறையிலே
எனக்கு-
கல்லறை காட்டு!

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே!

அங்கு தொப்புள் கொடி
நஞ்சுக்கொடியாய் மாறினாலும் பரவாயில்லை
எதுவுமே அறியாத-புரியாத
சிசுவாய்
நிம்மதியோடு போகட்டும்...!!!

படிப்பீர்..!!!

எழுவீர் மாணவ மாணவிகளே...!!
நன்றாய்க் காலைக் கடனை முடிப்பீர்!
தொழுவீர் இறையோன் அருளை நாடி!
தொடர்வீர் பாடம் தனை தேடி!

கல்விச் செல்வம் கடலாகும்!
கையளவதனைக் கற்றாலும்!
நல்ல அறிவோ ஊற்றாகும்!
அள்ள அள்ள பெருக்காகும்!

தாய் தந்தை யாரை மதிப்பீர்!
ஆசான் தன்னை கனஞ் செய்வீர்!
வஞ்சகமில்லா உள்ளம் பெறுவீர்!
கல்வி அருளை பெற்றிடுவீர்!

புத்தக மென்னும் தென்றலில்
தடவி யறிவை சுவாசிப்பீர்!
நிந்தமும் தூய மனங் கொண்டே!
மண்ணில் வாழ்வீர்!வளம் பெறுவீர்!

வியாழன், 14 ஏப்ரல், 2011

நட்பு உறவுகளே....!!

இந்த திருநாளில்
உங்கள் மனத்தெருவில்
எனது வாழ்த்துக்களும்
வந்து மலர் தூவட்டும்...

இன்று மட்டுமல்ல
ஆயுள் பூராகவும்
அவதாரிக்கும் நாட்கள் யாவும்
உங்களுக்கு-
திருநாளாகவே அமையட்டும்...
பெருநாளாகவே திகழட்டும்....

மகிழ்ச்சியை செப்பும்
சித்திரைப் பெருநாள்
உங்களை
சிந்திக்க வைக்கட்டும்....
எனது உறவை
உயிராய் மதிக்கட்டும்..!!!
வாழ்த்துக்கள் உறவுகளே....!!!

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நிம்மதி எப்போது...!

ஒப்பந்தத்திற்கு
முன்னே-உள்ளங்கள்
அழுது  வடித்தன....!

பின்னே
நிம்மதி கிடைக்கும்
என்று எதிர்பார்த்திருந்தவர்கட்கு
எத்தனை ஏமாற்றம்....?

அமைதி காக்க வந்த
படையினர்....
வெறும் பாராங்கற்களாய் வீதியில்.....!

இன்னும்-இங்கே
உயிர்ப் பலிகள்!

தினமும்-
பத்திரிகைகள் சுமர்ந்து  வரும்
படு பாதகச் செயல்களைத் தான்
விழிகள் வாங்கிக்கொள்கிறது!

நிம்மதி மூச்சைச் சுவாசிக்கும்
ஒரு நேரத்துக்காக
எத்தனை காலங்கலாகக்
காத்திருக்கிறோம்!
அது-
எப்போது நம்மை நாடி வருமோ....?

போவதும் வருவதுமாய்..!

நித்தமும்
கழுவி சுத்தப்படுத்திய
மேனி யெல்லாம்
காயங்களும்! கீறல்களும்!!

சப்பாத்துக் கால்களின்
அடையாளங்களும்
துப்பாக்கிக் கரங்களின்
வேட்டுத் தோட்டாக்களும்
என்-
முற்றத்து மணல் களிலெல்லாம்

சமாதானப் பேச்சு
தடைப்பட்டுப் போச்சு..!

என்-
தூய மனதில்
வேதனச் சுவடு;
இன மத-
பேதமென்றில்லை!

என்ன கொடுமை இது!
மனிதர்களை மனிதர்களே
கொன்று குவிக்கும்
விதம்...
தேசம் முழுவதும்
அச்சங்கள்..! பீதிகள்!!
தேயிலை சாயத்துக்கு
குருதி கலந்தாற் போல்..!

உயிர்-
தினம்...தினம்...
உடலை விட்டுப்
போவதும்! வருவதுமாய்..!!

இவற்கு-ஓர்
தீர்வு இல்லையா....?

இறைவா;
தேசத்தை
தேனிலும் இனிமையாக்கு!
அல்லது-
சுனாமியிலும் கொடுமையாக்கு!!

புலம்பலாய்!!

கிராமத்திலே
இனவாத சூனியங்களும் 
பயங்கரவாத சூழல்களும்
மனதை வெறிச்சோடியதாக்கும்.

வாழ்வில் ,
நிச்சயமில்லாத்தன்மை
புற்று நோயாகும்.

நிம்மதி வாழ்வை
எதிர்பார்த்தவாறு
நாங்கள் இன்னுமே
முகாம்களுக்குள்...
அகதிகளாய் பரிதவிக்கிறோம்!

பிட்டும் தேங்காய்ப்
பூவுமாய் வாழ்ந்தவர்கள்
கீரியும் பாம்புமாய் மாற
வேதனைகள்
கொழுந்து விட்டு எரியும்..!

அன்று
எங்கள் தோள்களை தட்டி
ஒரு பாத்திரத்தில்
தேநீர் அருந்தி மகிழ்ந்தவர்கள் தான்
இன்று அட்டைகளாய்
எங்கள் உதிரத்தையே
உருஞ்சுகிறார்கள்.

ஒவ்வொரு மூச்சிக்களும்
சுவாசத்தை வெளியேற்ற
அடி மனதிலோ-பயம்
கறையானாய் அரிக்கும்..!

துப்பாக்கித் தோட்டாக்களின்
சத்தங்களுக்கு மத்தியில்
நாங்கள்-
சுதந்திரத்தை நாடுகிறோம்!

ஆனாலும்
மனித உயிர்களுக்கு
உத்தரவாதமில்லை.

நாய்களுக்கு உள்ள
மதிப்புக் கூட
மனிதர்களுக்கு இல்லாத நிலை!!

திங்கள், 4 ஏப்ரல், 2011

நினைவுகளின் சுழல்வு!!!

கண்களுக்கு எட்டாத வெகு தூரத்தில்
நிழலாடும் நினைவுகள்.

தூங்கும் விழிகளை
தட்டியெழுப்பும் கனவு
போராட்டமாகும்.

கவிதைகளை மட்டுமே
எழுதத்தெரிந்த
ஆத்மா மட்டும்
சிந்தனை சிதறல்களில்

பத்திரிகைகளின் விமர்சனங்களாய்
முகவரி காட்டும்
இருப்பிட நிலமாய்
இதயம்

பேனாக்களின் உதிர்வுகளில்
அவலங்களை வெளிப்படுத்தும்  எழுத்துக்கள்...

களம் கொடுக்க
பசித்த வயிறுகளாய்
ருசிக்க முயலும் உதயத்தாரகைகள்
இரவு தூக்க போர்வையில்
நினைவுகளின் சுழல்வு
நிஜங்களின் உணர்வு....!!!!

ஏக்கங்களின் தாக்கங்கள்...!

மழையேயில்லாத வரண்ட நிலத்தில்
ஏன் நகர்கிறது
இந்த பாதங்கள்...!

வியர்வையில் குளித்த உடம்புகள்
தாகத்தில் தவிக்கின்றன...

அழிவுகள் நிறைந்து போன
கிராமத்தில்
சுட்டு (தீயாய்) எரிக்கின்றது சூரியன்.

சுகந்தம் ஊட்டும்
தென்றலில் தடவல்களும்
கொடூர வெயிலில் வெப்பமாய் வீசுகின்றது!

படுக்கையின் விரிப்பில்
தொந்தரவூட்டுப் கொசுக்களின் எண்ணிக்கைகளை
அழித்து....அழித்து...அழுகிறது
ஒரு வெள்ளை பிரம்பு

நிம்மதியற்ற நிலத்தின் மேல்
வருடா வருடம்,
தவறாமல் ஏற்படுகின்ற-
இயற்கை அழிவுகள் ஒவ்வொன்றும்
வரிசையாய் வருகின்றது!

மனம் நொந்த வாழ்வில்
தீயாய் கருகும்
ஏக்கங்களின் தாக்கங்கள்!!!

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மன ஓலங்கள்....

புழுதி கெழம்பிய தீச் சுடரில்
உடம்புகளின் தடவல்களுடே
மானிடம் சிந்திய வியர்வையின் துளி!

வரண்ட பூமியில்
பிறந்து விட்ட
கிழக்கிலங்கை மனிதர்களின்
மன ஓலங்கள்
எங்கோ......
எப்போதோ...
கேட்குமென்ற வேதனைகளின்
அவலங்கள்-
கண்களின் அருவியில்
கரை புரண்டிடும் ஆறு! கடல்!!

நிம்மதி மூச்சின்
சுவாசங்களும்.......
வேகங்களும்.....
தாகங்களும்....

எங்கள் இயற்கை அழிவுகளில்
தடவிய (தென்றல் ) காற்று!
இறைவா....! எம் வாழ்க்கைப் பயணங்களில்
உன் சோதனைகள் நிறைந்த,
வேதனைகளை-
விடாது காப்பாற்றுவோம் எப்போதும்...!!

காலத்தின் கோலம்....!!

ஆண்டுகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே நகர்கிறது.!
இளமைக் காலங்களை-
இனியையாய் போக்கிய
நாட்களின் மறைவுகள்;
இன்று-
இருண்ட இரவுகள்!
தூய மனங்கள்
கஷ்ட வாழ்க்கையில்
உதிர்ந்த பூக்களாய்
உலர்ந்து போகின்றன.

வரண்ட நிலத்தில்(பூமியில்)
ஈரம் கசியாத இரவுகளில்
நா வரண்டு துடிக்கும் .
தாகம் தலிக்கும்!!

மனதின் வேதனைகள்
இதய அடுப்பில் மூட்டிய
விறகுகள் போல்

எரிந்து சாம்பலாகின்றன.
புரியாத காலத்தின் கோலம்
புலம்பிச் செல்கின்றது.!

மழைக்கு ஏங்கி
இதயங்கள்-
கரமேந்தி பிரார்த்திக்கிறது....!

சனி, 2 ஏப்ரல், 2011

உறிஞ்சும் நிலமாய் கிழக்கு மண்....

சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும்
உயிர் பலிகளுக்கும்
விலையேற்றங்களுக்கும்....
போராட்டங்களுக்கும் மத்தியில் களித்த
அந்த.....
சோக நாட்கள்...!

இன்னும் இன்னும்
கடல் அலைகளாய்
மனக்கரையை.....
தினம் தினம்
அரிக்கின்றன....!

உயிர்- தான் உடலெங்கும்
அச்சத்தை போ(ர்)த்திக் கொள்கிறது!

மனம்
வேதனையில் துடித்து
கண்ணீர் விட்டு
கொதித்து அலர் நின்றது...!

வாழ்க்கை-
விரக்தியில்மாறி
சஹாராப் பாலைவனமாகின்றது...!

வயது-
கிழிக்கும் கலண்டர்தாள்களின்
திகதிகளினால்
முதுமையை தடவுகின்றது...!

இளைஞர்கள்-யுவதிகள்
கிழவன்-கிழவிகள்
சின்னஞ் சிறுசுகள்
படித்தவர்கள்-படியாதவர்கள்
ஏழை-பணக்காரர்கள்
பத்திரிகையாளர்கள்-எழுத்தாளர்கள்
இப்படி....இப்படி...
தொடர்ந்து... தொடர்ந்து...
இவர்களின் நிலைமைகள்....
அசம்பாவிதங்களின் இருளுக்குள்....
காணாமல் போகின்றது!
தாக்குதல்களின் கொடூரங்களுக்குள்
மண்ணாகிப் போகின்றது!

உறுப்புக்கள் சில
கால்கள் வேறாய்....
கைகள் வேறாய்...
தலைகள் வேறாய்....
ஏன்....?
அங்கினங்களாய்
உருக்குலைந்து
காகம்...
நரி....
நாய்....
பேய்களுக்கு உணவாய் மாறுகின்றது...!

பிறந்து வளர்ந்த
அந்த இருப்பிடம்
தாக்குதல்களால்
காணாமல் போனது....!

அதோ...
அந்த ஷெல்தாக்குதலில்...
கன்னி வெடியில்....
துப்பாக்கிச் சப்தங்களில்
கிழக்கு மண்ணின் நிலைமை....!

தற்போது-
ஊரடங்குச்சட்டம்
ஆமாம்-
ஈக்களும்
புழுக்களும்
ரோந்து செல்கின்றன.

மனிதர்களுக்குப்-
பதில்
மண் மூடைகள்....!

ஆனாலும் என்ன....
சமாதானம்
பேசப்படுகின்றது
தாக்குதல்கள்

அதிகரிக்கின்றன
உறிஞ்சும் நிலமாய்....!