புதன், 4 செப்டம்பர், 2013

உயிரின் நாடிஎல்லையி(ல்)லாக் கல்வியெனும் ஒளியைப் பெற்று 
இவ்வுலக வாழ்க்கையிலே ! ஏற்றம் பெற்று 
தொல்லையி(ல்)லா திவ்வுலகில் துருவ மாகத் 
துலங்கிடவே தூய்மையொடு கல்வி கற்போம் !


குருட்டு நெறியால் மனதைக் குரூர மாக்கிக்
கொண்டிழிவு புரிவதனை அறவே நீக்கி !
புரட்சி யினால் இவ்வுலகில் புதுமை பூக்க
பொலிவோடு கல்வியினைத் துணையாய்க் கொள்வோம் .!


கடல் போன்ற சொத்தெல்லாம் அழிந்து போகும்.
காலமெலாம் சேர்த்த பணம் கரைந்து போகும்
உடலோடு உயிரொன்றி வாழு மட்டும்
உயர்வான கல்வியது இணைந்து வாழும் !

ஒன்று குலம் ஒரு ஜாதி ஒன்றே மக்கள்
ஒற்றுமை தான் வையத்தின் உயிரின் நாடி
என்ற நிலை யோடு தினம் இணைந்து வாழ !
இணையில்லாக் கல்விய தன் துணையே வேண்டும் !


இளமையது வாழ்க்கைய தன் வசந்த காலம்
இவ்வுலகின் பொறுப் பெல்லாம் மனிதர் கைக்கே !
தெளிவுடனே இளமையிலே கல்வி தன்னைத் ,
தேடிடுவோம் வையத்தை திருத்தம் செய்வோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக