மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றிலும் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்கள் பாரிலே பிறப்பாள்.!
இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்
தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வளப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்
குருடனாய் ,செவிடனாய் ,குடிக்கு அடிமையாய்
அறிஞனாய் , கலைஞனாய் ஆயிரம் வேஷம்
எதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்
முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான் ..