ஞாயிறு, 25 டிசம்பர், 2011

வறுமையின் வாசல்கள்...!
வானத்தையும்
வட்ட நிலவையும்
வீட்டுக்குள் விட்டு வைக்கும்
விழிகள் திறந்த
எனது
வீட்டுக் கூரை!

சாக்குக் கட்டிலில்
சாவை எதிர் பார்த்து
சாய்ந்து கிடக்கும்
ஏகாந்த நிலையில்
எனது அப்பா!!

வறுமைக் கோடு
வரைந்த சித்திரத்தில்
படிக்க முடியாது
பள்ளிப் படிப்பை
பாதியில் நிறுத்திய
பரிதாபத்துக்குரிய
பதினாறு வயதுத் தங்கை!!

விளக்க மின்றி
வெடித்த துப்பாக்கியால்
செத்துப் போன
சுண்ணாம்புச் சுவரில்
சொருகப் பட்டிருக்கும்
எனது
அப்பாவிக் கணவனின்
புகைப்படம்!!

புட்டிப் பால் கேட்டு
தொந்தரவு படுத்தும்
ஒன்றும் மறியாத
இரண்டு வயதுக் குழந்தை!!!

வறுமையைப் புரியாது
வாசலில் நின்று
மணியடிக்கும்
ஐஸ் பழக்காரன்!!

எனது
இளமையை வேட்டையாட
வெளியே மேய்கின்ற
எச்சில் நாய்கள்!!

ஒரு வேளை மட்டும்
உணவுக்காக வேண்டி
போராட்டம் நடத்தி
அடுப்பை எரிக்கும்
சமயற் கட்டு!!

வேதனையைப் போக்க
வேலை தேடிய இடத்தில்
வெச்சிக்க "வா"என்று
வெறித்தனமாய் கேட்டான்
காமுகன் ,
அடிக்கடி வலிக்கும்
அந்த
கிழட்டு நரியின்
கீழ்த்தரமான வார்த்தை ...!..
படு மோசமான எண்ணம்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக