புதன், 21 டிசம்பர், 2011

என் பிஞ்சுக் குழந்தையின் கால்கள்
சுரந்திருந்த நெஞ்சின் _
பால் சுரப்பின் மீது உதைத்ததா.?
இல்லை,
நாவு தவித்ததா.?

மடியின் போர்வைக்குள்
புகுந்து விளையாட வேண்டிய
சிசுவின் ஆரம்பம்

மண் தரையில்
தலை சாய்ந்து படுத்திருக்கின்றேன்...

பல்லாயிரம் சோதனைகளைச் சுமந்த படி
வாழ்க்கையில் நிஜங்களை தேடுகிறேன்

"பெண்"என்று பொறுமையோடு வாழ்ந்து வந்த காலங்கள்
எனக்கினி நிம்மதி தராதென்று உறுதியாயிற்று
என் தாய்மைக்குப் போட்டியாய் _
இன்னும்ஒருத்திக்கு இடம் கொடுத்தபடி
நான் நேசித்து நேசித்து உயிராய் மதித்த
என்னவரின் உறவு தூரமாயிற்று!
கிளை விட்டு கிளை தாவும் மந்தியாயிற்று!

என் துயரம்
இதயத்திலிருந்து தான் சுரக்கிறது
என் குழந்தையின் கதறல்
பிறப்பிலிருந்தல்லவா எழுகிறது...?

என் கண்களிலிருந்து
கண்ணீர் வடியும் போதெல்லாம்
அவன் இதயத்திலிருந்து பாசம் வழியும்,
என் உறவுகள் _
உரிமைகளை சுரக்கும் போதெல்லாம்
இன்னொருத்தியை சுமப்பதை
அவன் நாவிலிருந்து ரசம் கொட்டும்!

நான் கதறித் துடிக்கும் குழந்தையினை
அரவணைத்து தடவிக் கொண்டிருக்க
அவன் என் வாழ்வினை தலாக் செய்ய
என் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறான்

அவனை நோக்கி
என் நா பேச துடிக்கும் போதெல்லாம்
பெண்மையின் பொறுமை என்னை மௌனமாக்கும்..!

என் குழந்தையின் பாதங்கள் நகர்ந்து துடிப்பதால்
தாயின் பற்றுக்குள்ளானவளாய் நான்..!

என்னை கவனிப்பதற்கு :
தயாரான படி!
இருட்டு அறைக்குள்
வெளிச்சத்தை தேடிய படி
என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள்!

ஒரு பெண்ணின் வாழ்வில்
எப்போது மகிழ்ச்சி பொழியுமோ...?
அப்போது -
கணவரின் மனதில்
சந்தேகம் தொலையனும்
சந்தோஷம் மலரனும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக