இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து--நல்ல
இசை தரும் வினையாயாய் குடைந்தெடுத்து !
உதயத்தில் பூபாளம் மீட்டிடுவேன் --உன்
உயர்வுக்கு நல்வழி காட்டிடுவேன் !
தீமையை முளையிலே தீயிடுவேன் -- எந்த
தீயவர் வாழ்க்கையையும் திருத்திடுவேன் !
ஆமைபோல் அமைதியாய் வாழச் சொல்வேன் -நெஞ்சில்
ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன் !
பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன்-- மனிதருக்குள்
பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன் !
கூசும் நா வேற்றுமை கூறி நின்றால் --மனிதா
கூடி நாம் வாழ்ந்தாலோர் குறை வருமோ ?
எல்லா மதங்களும் ஒன்று என்பேன் --அதில்
எல்லா இறைவனும் ஒன்று என்பேன் !
இல்லை என்றால் தெய்வம் இவ்வுலகிலில்லை --மனிதா
அல்லாஹ் துணையின்றி ஏதுமில்லை !
ஜாதிகள் ஆண் பெண் இரண்டு என்பேன் --இங்கு
யாவரும் சரிசம மாந்தரென்பேன் !
நீதி நிலை கெட்ட மனிதர்களை --கண்டு
நெஞ்சமே நெருப்பாக வேகுதடா !
ஏழையர் யாவரென் உடன் பிறப்பே --அவர்
ஏற்றம்காண சேவை செய்திடுவேன் !
கோழையாய் வாழ்வதை நான் வெறுப்பேன்--அவர்
குறுக்கு வழி சென்றால் நான் தடுப்பேன் !
அன்பு தான் என் மனச் சாந்தி யென்பேன் --அதை
இதயத்தில் வைத்து நான் பேணிடுவேன்!
பண்பான மாந்தரை வர வழைபேன் --கவி
பாவாலே அவர் வாழ வாழ்த்துரைப்பேன் !
கரைந்தோடும் நெஞ்சங்கள் துணையிருப்பேன் !
நிலையில்லா வாழ்வில் நான் நிறைந்திருப்பேன் --எந்த
நிலை வந்த போதும் நான் --வாழ்வில்
செய்நன்றி கொல்வேன் !
கூடாதே கூடாதகூட்டத்திலே --உன்
குணம் கெட்டுப் போகும் அக்கூட்டத்தினால் !
நாடாதே மது மாது சூது தன்னை --அவை
நாளெல்லாம் உன் வாழ்வை அழித்தொழிக்கும் !
கண் முன்னே கயவரைக் கண்டேனென்றால்--நான்
காறியவர் முன் உமிழ்ந்திடுவேன் !
என் மனத் தோட்டத்தில் ஏங்குகிறேன் --நாட்டில்
இன மூன்றும் ஒற்றுமை காண்பதென்று ?
பொல்லாத காலமினி மாற வேண்டும் --அதில்
போலிகளும் புரட்டல்களும் ஒழிய வேண்டும்
இல்லாமை நிலை முற்றாய் மாற வேண்டும் --பொருள்
இருப்பவர் இல்லாருக்கு ஈய வேண்டும் !
இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் --இங்கே
இன மூன்றும் ஒற்றுமை காண வேண்டும்
வன்முறையால் நன்மைகள் சேர்க்கலாமோ --நல்ல
வழி கண்டு அமைதி நிலை நாட்டலாமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக